| ADDED : டிச 29, 2025 06:24 AM
ஊட்டி: ஊட்டி முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய 'மொற்பர்த்' பண்டிகை கொண்டாடப்பட்டது. நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்களில், தோடர் பழங்குடியினர் பல்வேறு தனித்துவமான பாரம்பரிய வழக்கங்களை கொண்டுள்ளனர். இவர்கள், டிச., இறுதி அல்லது ஜன., முதல் வாரத்தில் 'மொற்பர்த்' என்ற பண்டிகையை கொண்டுவது வழக்கமாக உள்ளது. நடப்பாண்டின் பண்டிகை, தோடரின மக்களின், தலைமை இடமாக கருதப்படும், ஊட்டி தலைகுந்தா அருகில் அமைந்துள்ள முத்தநாடு மந்து பகுதியில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தோடரின மக்கள் பாரம்பரிய கோவிலில் மண்டியிட்டு சிறப்பு வழிபாடு நடத்தி, பாரம்பரிய உடை அணிந்து, கோவிலை சுற்றி நடனமாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து, இளைஞர்கள் இளவட்ட கல்லை துாக்கி தங்களது வலிமையை வெளிப்படுத்தினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், பால் மற்றும் நெய் ஆகியவற்றில் பிரத்யேகமாக தயாரித்த பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில், உள்ளூர் மக்களுடன், காசி பானாரஸ் பல்கலைகழக மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, தோடர் பழங்குடியின நிர்வாகிகள் மற்றும் மக்கள் செய்திருந்தனர்.