மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
மஞ்சூர்: குந்தா அணையை சுற்றி உள்ள, மின்வாரியத்துக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டம், குந்தா மின்வட்டத்தின் கீழ் குந்தா மின் நிலையம், அதை ஒட்டி அணை உள்ளது. அணையை ஒட்டி தனியார் சிலர், 30 ஏக்கர் அளவுக்கு மின்வாரிய நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை பயிர் செய்து வருகின்றனர். ' இங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்,' என, பல்வேறு பொது நல அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் வருவாய் துறையை அணுகி வாரிய நிலத்தின் ஆக்கிரமிப்பை மீட்டு தர கோரி மனு அளித்தனர். ஊட்டி ஆர்.டி.ஓ., உத்தரவுப்படி, குந்தா வருவாய் துறையினர் 'சர்வே' பணி மேற்கொண்டு அதற்கான அறிக்கையை ஆர்.டி.ஓ., விடம் அளித்தனர். இந்த சர்வே பணி மேற்கொண்டு மூன்று ஆண்டுகள் கடந்தும் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்படவில்லை. மின் உற்பத்திக்கு சிக்கல்
தற்போது, அணையை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் தேயிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. பருவ மழையின் போது அடித்து வரப்படும் சேறும், சகதியும் அணையில் சேகரமாகிறது. இதனால், குந்தா அணையின் உயரமான, 89 அடியில் பாதி அளவுக்கு சகதி நிறைந்துள்ளது. சகதியால் அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அணையில் சேர்ந்துள்ள சகதிகள் பல ஆண்டுகளாக அகற்றப்படவில்லை. இதனால் ராட்சத குழாய் வழியாக சகதியுடன் தண்ணீர் வெளியேறுவதால் மின் உற்பத்திக்கான உதிரி பாகங்கள் அடிக்கடி பழுதாகி மின் உற்பத்தி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.அணையில் சேர்ந்துள்ள சகதிகளை அகற்ற மின்வாரியம் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் பருவ மழையின் போது அணையில் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் மின் உதிரி பாகங்கள் அடிக்கடி பழுதாகி மின் உற்பத்தி மேற் கொள்வதிலும் சிக்கல் உருவாகியுள்ளது. 'இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த மின்வாரியம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'குந்தா அணையை சுற்றி, 30 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிப்பு இருப்பது வருவாய் துறை சர்வேயின் போது தெரிய வந்துள்ளது. மேலதிகாரிகளுக்கு தெரிவித்து, விரைவில் ஆக்கிரமிப்பு மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
03-Oct-2025