| ADDED : டிச 13, 2025 08:00 AM
ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில், சுற்றுலா பயணிகள் உட்பட, பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். இச்சாலையில், எஸ்.ஏ.டி.பி., திறந்த வெளி மைதானம் அமைந்துள்ளதால், பயிற்சி பெறும் மாணவ, மாணவியர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களும், இந்த நடைபாதையை பயன்படுத்துகின்றனர். இப்பகுதி நடைபாதையை ஆக்கிரமித்து, சில வியாபாரிகள் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் நடக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தொடர்ந்து, 'நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,' என, நகராட்சிக்கு புகார் அளிக்கப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் நேற்று வந்து ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். பல வியாபாரிகள் தாமாக முன்வந்து பொருட்களுக்கு சேதம் இல்லாமல் கடைகளை அகற்றினர். ஓரிரு வியாபாரிகள் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்து காலகெடு கேட்டனர். அதிகாரிகள் கூறுகையில், 'சில நாட்களுக்குள் இங்குள்ள கடைகளை முழுமையாக அகற்றப்பட வேண்டும்; இல்லாத பட்சத்தில் மீண்டும் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.