உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை பாதையில் முகாமிட்ட யானைகள்; மரப்பாலம் சென்றதால் மக்கள் நிம்மதி

மலை பாதையில் முகாமிட்ட யானைகள்; மரப்பாலம் சென்றதால் மக்கள் நிம்மதி

குன்னுார்;குன்னுார் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டிருந்த யானைகள் மரப்பாலம் பகுதிக்கு சென்றதால் மக்கள் நிம்மதி அடைந்தனர். குன்னுார் -மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் முகாமிட்டிருந்த, 8 காட்டு யானைகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நான்சச் கிளண்டேல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, பள்ளி மற்றும் ரேஷன் கடையை உடைத்து, கரும்பு உள்ளிட்டவைகளை உட்கொண்டு சேதம் செய்தன.தொடர்ந்து, வனத்துறையினர் விரட்ட முயற்சித்த போதும் தேயிலை தோட்டங்களிலேயே முகாமிட்டன. தொடர்ந்து சாலையை கடந்து, டான்டீ. குடியிருப்பு, டபுள் ரோடு, பால்காரலைன் பகுதிகளில் உள்ள வாழை மரங்களை சேதம் செய்தது.இரவில் ரயில் பாதை வழியாக, குன்னுார் பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்த யானைகளை, வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி வராமல் தடுத்தனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக லாஸ் நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள் நேற்று முன்தினம் சாலையை கடந்து காட்டேரி சென்றன.மீண்டும் நேற்று அதிகாலை, 1:00 மணியளவில் நந்தகோபால் பாலம் வழியாக சாலைக்கு வந்த போது, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர்.பொங்கல் விடுமுறையையொட்டி நள்ளிரவிலும் பைக் உட்பட சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வனத்துறையின் தீவிர முயற்சியால், நேற்று மாலை மரப்பாலம் வனப்பகுதிக்கு சென்றதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்