| ADDED : பிப் 15, 2024 12:19 AM
அன்னுார் : பசூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டரை மலைக்க வைக்கும் அளவுக்கு மனுக்கள் குவிந்தன. மகளிர் உரிமை தொகை பெற ஆறு மாதங்களாக அலைகிறோம் என பெண்கள் கண்ணீருடன் புகார் தெரிவித்தனர்பசூரில், எஸ்.ஆர்.மஹாலில், மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. ஊராட்சித் தலைவர் வித்யா வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.கோவை கலெக்டர் கிராந்தி குமார் பேசுகையில்,' அரசு பள்ளிகளில், படித்த மாணவியருக்கு, புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரியில் படிக்கும் போது மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அகில இந்திய அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர், என்றார்.முகாமில் 311 பேருக்கு, ஒரு கோடியே 42 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.ஏராளமான மக்கள், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை என ஏராளமான மனுக்கள் அளித்தனர்.அல்லப்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் நந்தகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிலர் அளித்த மனுவில்,' ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகள் தரம் குறைவாக செய்யப்படுகிறது. வரவு செலவு கணக்கு ஊராட்சி உறுப்பினர்களுக்கு வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. ஊராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைவரும் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளோம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.பசூர் மற்றும் புதுப்பாளையத்தைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில்,' மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய்க்காக ஆறு மாதங்களாக கிராம நிர்வாக அலுவலகம், தாலுகா அலுவலகம், ஊராட்சி அலுவலகம் என அலைந்து வருகிறோம்,' என கண்ணீருடன் புகார் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பெருமாள் சாமி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், தாசில்தார் நித்திலவள்ளி மற்றும் பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.