பெ.நா.பாளையம்;அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பால் ரேஷன் கடைகளில் மக்கள் திரண்டனர்.தமிழக அரசு, தைப்பொங்கலையொட்டி, ஆண்டுதோறும் பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, 15ம் தேதி தைப்பொங்கல், சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, தமிழக அரசு ரேஷன் கடைகள் வாயிலாக, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 1000 ரூபாய் ரொக்க பணம், பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என, அறிவித்தது.இந்த பரிசுத்தொகை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கன் வழங்கும் பணி நேற்றுமுன்தினம் துவங்கியது. ரேஷன் கடைகளில் பொதுமக்கள் டோக்கன் வாங்க திரண்டனர்.சில இடங்களில் உள்ளாட்சி கவுன்சிலர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டனர்.டோக்கன்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள் குறிக்கப்பட்டு இருந்தது. பொங்கல் பரிசுத்தொகுப்பு ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் வாயிலாக வரும், 10ம் தேதி முதல், 14ஆம் தேதி வரை தொடர்ச்சியாக விநியோகம் செய்யப்பட உள்ளது. பொங்கல் பரிசுத்தொகை குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் ஒருவர் பெற்றுக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்கள் வாயிலாக, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட மாட்டாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.நேற்று முன்தினம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. இதில், பலருக்கு டோக்கன் வழங்குவது நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறி, ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்க மறுத்தனர். இதனால் சில இடங்களில், ரேஷன் கடை ஊழியர்களுக்கும், டோக்கன் வாங்க வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இது குறித்து, ரேஷன் கடையில் டோக்கன் வாங்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள் கூறுகையில்,' இதுவரை ஆண்டுதோறும் தை பொங்கல் நாளன்று அரசு வழங்கிய பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவற்றை கொண்டு மகிழ்ச்சியாக பொங்கல் கொண்டாடினோம். அரசு பொங்கல் தொகையும் வழங்கியது. ஆனால், இந்த ஆண்டு ரொக்க தொகையும் இல்லை. பச்சரிசி, சர்க்கரை, கரும்பும் இல்லை என கூறி, திருப்பி அனுப்பி விட்டனர்' என்றனர்.இந்நிலையில், நேற்று காலை தமிழக அரசு அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசுத்தொகுப்பு, ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டது. இதையடுத்து, ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வாங்க மக்கள் குவிந்தனர்.இது குறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில்,' சமூக வலைதளங்களில் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. எங்களுக்கு இதுவரை உத்தரவு வரவில்லை. வந்தவுடன் அரசு ஆணையின்படி, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்' என்றனர்.