உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  விவசாய பயிர்களை சேதப்படுத்தும் யானை கூட்டம்; நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம்

 விவசாய பயிர்களை சேதப்படுத்தும் யானை கூட்டம்; நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் போராட்டம்

பந்தலுார்: பந்தலுார் அருகே நெல்லியாம்பதி, சீபுண்டி பகுதிகளில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் யானைகளை, வனத்திற்குள் விரட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது. பந்தலுார் அருகே நெல்லியம்பதி, சீபுண்டி உள்ளிட்ட பகுதிகளில், முதுமலை வனத்தில் வாழ்ந்து வந்த, மவுண்ட்டாடன் செட்டி சமுதாய மக்கள், மாற்று திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்பட்டனர். குடியமர்த்தப்பட்ட மக்கள் வாழை, மேரக்காய், இஞ்சி உள்ளிட்ட விவசாயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 10 நாட்களுக்கு மேலாக, இந்த பகுதியில் முகாமிட்டுள்ள, 15க்கும் மேற்பட்ட யானை கூட்டம், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதுடன், பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. யானை தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, கிராம பகுதியில் எம்.எல்.ஏ. ஜெயசீலன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது மக்கள் கூறுகையில், 'கிராமத்தில் முகாமிடும் யானைகளால் தங்களுக்கு கடந்த, 10 நாட்களில் மட்டும், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. யானை தொல்லையிலிருந்து தங்களையும், தங்களின் விவசாய பயிர்களையும் காப்பாற்ற வேண்டும்,' என்றனர். எம்.எல்.ஏ., ஜெயசீலன் கூறுகையில், ''மக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகளால் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. விவசாய பயிர்களும் பாதிக்கப்படும் நிலையில், தற்போது மாற்று குடியமர்வு பகுதியில் முகாமிட்டுள்ள, யானைகளை, டிரோன் கேமராவில் கண்காணித்து, கும்கி யானைகள் உதவியுடன் அடர்த்தியான வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க, வன அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்படும். அதில், தீர்வு கிடைக்காவிட்டால், கிராம மக்களுடன் இணைந்து தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்,'' என்றார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாய தோட்டங்களில் ஆய்வு செய்தார். ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜான்சன், உஸ்மான், அவரச்சன், கோபி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை