ரூ. 40 கோடியில் காட்டேரி - ஊட்டி புறநகருக்கு... மாற்றுப் பாதை! 20.5 கி.மீ., துாரம் 138 கல்வெட்டுகள் அமைக்க திட்டம்
ஊட்டி:குன்னுார் காட்டேரி - ஊட்டி புறநகர் மாற்றுப்பாதை திட்ட பணி, 40 கோடி ரூபாயில் விரைவாக நடந்து வருகிறது. ஊட்டிக்கு ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்., மற்றும் மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வார இறுதி நாட்களில் நாள்தோறும், 20 ஆயிரம் வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக, குன்னுார் முதல் ஊட்டி செல்லும் சாலை வளைவுகள், குழிகள் நிறைந்த பகுதி என்பதால், கோடை சீசன் காலங்களில் விரைவாக வாகனங்களை இயக்க முடியாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், குறித்த நேரத்துக்கு சுற்றுலா மையங்களுக்கு செல்ல முடியாமல், பயணிகள் அவதிப்படுகின்றனர். பலரும் தங்களின் சுற்றுலா திட்டங்களை பாதியில் கைவிட்டு சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. மாற்று பாதை திட்டம்
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில், குன்னுார்- ஊட்டிக்கு மாற்றுப்பாதை ஒன்று உருவாக்க மாநில நெடுஞ்சாலை துறையினர் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர். அதில், மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள், குன்னுார் நகருககுள் செல்லாமல் நேரடியாக ஊட்டிக்கு செல்லும் வகையில், 40 கோடி ரூபாயில் புறவழிச்சாலை தரமாக அமைப்பது குறித்தும் திட்டமிட்டு பணிகளை துவக்கி உள்ளனர். ரூ.40 கோடியில் பணி
மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'நீலகிரியில் சீசன் காலங்களில் பெரும் தலைவலியாக இருக்கும் வாகன நெரிசலை தவிர்க்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குன்னுாருக்கு செல்லாமல், ஊட்டிக்கு செல்ல மாற்றுப்பாதையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, புதிதாக உருவாக்கப்படும் மாற்றுப்பாதையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் மலைப்பாதையில் வரும் வாகனங்கள் காட்டேரி, சேலாஸ், கெந்தளா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, காந்தி பேட்டை வழியாக ஊட்டிக்கு செல்ல முடியும். இந்த திட்டத்தின் படி, 20.5 கி.மீ., தொலைவு கொண்ட இந்த சாலை குறுகலான சாலையில், 40 கோடி ரூபாய் மதிப்பில், புதிய மாற்றுச்சாலை தரமாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, மழைநீர் வடிகால், சிறு பாலங்கள் என மொத்தம், 138 கல்வெட்டுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்து சாலை செப்பனிப்பட்டால், அடுத்த கோடை சீசனின் போது, குன்னுார்- ஊட்டி சாலையில் ஏற்படும் வாகன நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்,' என்றனர்.