ஐகோர்ட் உத்தரவை மீறி கட்டடங்களில் சீல் அகற்றம்; மலை பாதைகளில் உள்ள இயற்கை வளங்களுக்கு ஆபத்து
நீலகிரியில், குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் ஆண்டுதோறும் அக்., நவ., மாதங்களில் வடகிழக்கு பருவமழை; ஊட்டி, குந்தா பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம். இதனால், கடந்த காலம் முதல் மழை காலங்களில் மலை பகுதிகளில் நிலச்சரிவு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.இது போன்ற பேரிடர் பாதிப்புகளை தவிர்க்க, சரிவான பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவதற்கு, மாநில அரசு, ஐகோர்ட் பல வரன்முறைகளை அறிவித்து, உத்தரவு பிறப்பித்துள்ளன. அதில், மலை பகுதிகளுக்கான 'மாஸ்டர் பிளான்' சட்டத்தை மதிக்காமல், பல்வேறு இடங்களில், விதிமீறிய கட்டடங்கள் புற்றீசல் போல பெருகி வருகின்றன. இதனை ஆய்வு செய்யும் உள்ளாட்சி அமைப்புகள், அனுமதியில்லாத, விதிமீறிய கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கின்றனர். இது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. 'சீல்' அகற்றப்பட்டு விதிமீறல்
இந்நிலையில், ஊட்டி, குன்னுார் உட்பட மாவட்டத்தின் சில இடங்களில், கோர்ட் உத்தரவுகளை மதிக்காமல், கட்டடங்களில் 'சீல்' அகற்றப்பட்டு பணிகள் நடப்பதும், விடுதிகளாக இயங்குவதும் தொடர்கிறது. அதில், குன்னுார் மவுன்ட் ரோடு பகுதியில் கடந்த, 2020ல், விதிமீறிய கட்டடத்தின் அறைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.  அரசியல்வாதிகள்; சில உள்ளாட்சி அதிகாரிகள் ஆதரவுடன், இந்த சீல்அகற்றப்பட்டது. இதேபோல, மவுண்ட் பிளசன்ட்உட்பட பல இடங்களிலும் சில கட்டடங்களில் சீல் அகற்றப்பட்டுள்ளது.மேலும், குன்னுார்- மேட்டுப்பாளையம் மலை பாதை ஓரங்களில் உள்ள பட்டா நிலங்களில், மரங்கள் வெட்டுவதற்கும், சாலை அமைப்பதற்கும்கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்படவில்லை.  கிடப்பில் புகார் மனுக்கள் 
தற்போது, அபாய பகுதிகளில் கூட அனுமதி வழங்கப்படுவதால், மரங்கள் வெட்டப்பட்டு மண் சரிவு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும், 'குன்னுார் அட்டடி நகராட்சி பள்ளி அருகே கட்டப்படும் பிரம்மாண்ட கட்டடம் கட்டுவதை தடுக்க வேண்டும்; காணிக்கராஜ் நகர் பகுதியில் பிரம்மாண்ட சாலை அமைத்து கட்டப்படும் கட்டடங்களால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும்,' என வலியுறுத்தி, மாநில முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு மக்கள் சார்பில் பல புகார் மனுக்களை அனுப்பியும் இதுவரை நடவடிக்கை இல்லை. இப்பகுதிகளில் மழை காலங்களில், நிலச்சரிவு அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து கட்டுமான பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,'' மாவட்டத்தில் 'சீல்' அகற்றப்பட்டு விதிகளை மீறி செயல்படும் கட்டடங்களை ஆய்வு செய்ய, மூன்று கமிட்டிகள் அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
ஒப்புதலுடன் நடக்கும் வீதிமீறல்கள்...
லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''மலையிட பகுதிகளில், நகராட்சி, பேரூராட்சியில், 2.5 ஏக்கர் நிலப்பரப்பு வரையிலும், ஊராட்சி பகுதிகளில், 5 ஏக்கர் நிலப்பரப்பு வரையில் அமையும் மனை பிரிவுகளுக்கும், மாவட்ட கலெக்டர் ஆய்வறிக்கை அடிப்படையில், 'டிரிபிள்- ஏ' கமிட்டியின் ஒப்புதல் பெற்று, கோவை மண்டல அளவில் அனுமதி ஒப்புதல் அளிக்கப்படுகிறது.இந்த வரம்பிற்கு மேல் உள்ள நில பயன் மாற்றத்துக்கு, 'ஹாக்கா' கமிட்டியிடம் ஒப்புதல் பெறவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவையில் பல அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அனுமதி பெறும், வெளி மாநில பணம் படைத்தவர்கள் எவ்வித இடையூறுமின்றி, மலை கரைத்து அழிவுக்கு வழி வகுத்து வருகின்றனர். இதனால், ஊழல் அதிகரித்து மலை மாவட்டம், கருப்பு பண புழக்கத்தின் புகலிடமாக மாறி உள்ளது,'' என்றார்.