மேட்டுப்பாளையம் : மூடாக்கு விவசாயத்தால், பூச்சிகளின் தாக்குதலில் இருந்து, கரும் பச்சை நிற தர்பூசணி பழச் செடிகள் பாதுகாப்பதோடு மகசூலும் அதிகரிக்கிறது.கோடை காலம் துவங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த வெப்பத்திலிருந்து தணித்துக்கொள்ள, சாலையின் ஓரங்களில் பச்சையுடன் கலந்த வெள்ளை நிற தர்பூசணி பழங்களை விற்பனை செய்கின்றனர். இந்த பழங்கள் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைத்து, இனிப்பான சுவையை கொடுக்கக் கூடியதாக உள்ளது. கடலூர், விழுப்புரம், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இந்த தர்பூசணி அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. கரும் பச்சை நிற தர்பூசணி
பெரிய அளவில் உள்ள இப்பழத்தை வியாபாரிகள் வாங்கி வந்து,விற்பனை செய்கின்றனர்.மேலும் சிறிய அளவில் உள்ள கரும் பச்சை நிற தர்பூசணி பழத்தையும், விற்பனை செய்கின்றனர். இந்த பழச்செடிகளை மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், ஒரு சில விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பழத்தில் இனிப்பு தன்மை அதிகமாக இருப்பதால்,விலையும் சற்று அதிகமாக இருப்பதோடு,பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். மேட்டுப்பாளையம் அருகே பாலப்பட்டியில், ஓடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், கரும் பச்சை நிற தர்பூசணி செடிகளை பயிர் செய்துள்ளார். இந்த செடிகளை 'டிஷ்யூ பேப்பரை' கொண்டு மூடி வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கரும் பச்சை நிறமுடைய தர்ப்பூசணி பழச் செடிகளை, இரண்டு ஏக்கரில் பயிர் செய்துள்ளேன்.பயிர் செய்த, 60 நாளில் ஒரு அறுவடையும், 70 வது நாளில் மற்றொரு அறுவடையும் செய்யப்படும்.அதன் பிறகு செடிகள் காய்ந்து விடும். ஒரு ஏக்கரில், 4,500 முதல், 5,000 செடிகள் வரை நடவு செய்யலாம். இந்த செடிகளில் புழுக்களின் தாக்குதல் நடைபெறாமல் இருக்க, 'டிஷ்யூ பேப்பரால்' மூடாக்கு செய்யப்பட்டுள்ளது. இதனால் களைகள் வரவும் வாய்ப்பு இல்லை. அதிக அளவு காய்கள்
ஒரு மாதத்திற்கு இந்த மூடாக்கு வைக்க வேண்டும். அதன் பிறகு இந்த மூடாக்கு பேப்பரை அகற்றி விட வேண்டும்.இந்த செடிகளுக்கு மூடாக்கு செய்வதால், செடிகளில் பூச்சிகளின் தாக்குதல் ஏற்படாது. ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை கிடைப்பதால், செடிகளில் காய்கள் அதிகளவு பிடிக்க வாய்ப்புள்ளது.டிஷ்யூ பேப்பரை அகற்றிய பின், செடிகளுக்கு தேவையான உரம் வைக்க வேண்டும். செடிகளில் நன்கு காய்கள் பிடித்த நிலையில், 60வது நாளில் தர்பூசணி பழம் அறுவடை செய்யலாம், என்றார்.
கூடுதல் விளைச்சல்
மூடாக்கு விவசாயம் குறித்து விவசாயிகள்சிலர் கூறியதாவது: கடந்தாண்டு கரும்பச்சை தர்பூசணியை பயிர் செய்த போது, ஒரு ஏக்கரில், 20 டன் வரை மகசூல் கிடைத்தது. அதில் அதிக அளவில் களைகள் இருந்ததால், செலவு அதிகம் ஆனது.இந்நிலையில் வேளாண் விஞ்ஞானிகள் தகவலின் பேரில், இந்த முறை, தர்பூசணி நாற்றை நடவு செய்தவுடன், கம்பிகளை நட்டு, கெட்டித் தன்மையுடைய வெள்ளை நிற டிஷ்யூ பேப்பரை, செடிகள் மீது மூடாக்கு போடப்பட்டது. ஒரு ஏக்கருக்கு, 23 ஆயிரம் ரூபாய் செலவானது. 30 நாட்கள் இந்த பேப்பர் செடிகள் மீது மூடி இருக்க வேண்டும். அதன் பிறகு அந்த பேப்பரை எடுத்து விட வேண்டும். இதனால் டிஷ்யூ பேப்பர் மூடாக்கு போடுவதன் வாயிலாக, களைகள் ஏற்படுவதில்லை. ஏக்கருக்கு மூன்று டன்களுக்கு மேல் கூடுதலாக மகசூல் கிடைக்கும் என, விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதனால் முதன் முறையாக டிஷ்யூ பேப்பரை மூடாக்கு போட்டு உள்ளோம். இப்பகுதியில் மற்ற செடிகளுக்கு, பச்சை நிற பிளாஸ்டிக் துணியால் கூடாரம் அமைத்துள்ளனர். ஆனால் கெட்டித் தன்மையுடைய டிஷ்யூ பேப்பர் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேப்பரை இரண்டு அல்லது மூன்று முறை மீண்டும் பயன்படுத்தும் வகையில் கெட்டியாக உள்ளது.வேலை ஆட்கள் பிரச்னை உள்ளதால், இரண்டு மாதங்களுக்குப் பின், மீண்டும் தர்பூசணி பயிர் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.