| ADDED : ஜன 08, 2024 11:54 PM
ஊட்டி:'நீலகிரியில் ஆட்டோக்கள் நியமிக்கப்பட்ட துாரத்தை தாண்டி இயக்க அனுமதி வழங்க கூடாது,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி சுற்றுலா டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தினர், கலெக்டரிடம் கொடுத்த மனு:நீலகிரியில், சுற்றுலாவை நம்பி, 3,000 சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் உள்ளனர். நகராட்சிக்குள் இயங்கும் மூன்று சக்கர ஆட்டோ வாகனங்கள் சுற்றுலா பயணிகளை ஏற்றி வனப்பகுதியில் சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்கின்றனர். 3 பேர் மட்டும் செல்ல அனுமதி உள்ள ஆட்டோவில், 7 பேர் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட துாரத்தை விட அதிக துாரம் அழைத்து செல்கின்றனர்.அனுமதி பெற்ற கார் போன்ற சுற்றுலா வாகனங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் பாதுகாப்பு கருவிகள் உள்ளது. ஆனால் ஆட்டோவில் அதுபோன்ற உபகரணங்கள் கிடையாது. சில நேரங்களில், நீலகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் கோவை வரை பயணிகளை அழைத்து செல்கின்றனர்.ஆட்டோ போன்ற வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அதிக தூரம் அழைத்து செல்வதால் எங்களது வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, ஆட்டோக்கள் நியமிக்கப்பட்ட துாரத்தை தாண்டி இயக்க அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.