குன்னுார் : குன்னுார் தேயிலை ஏல மையம், கோவைக்கு மாற்றம் செய்யும் முயற்சி, 'தினமலர்' செய்தி எதிரொலியால் கைவிடப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக தேயிலை உற்பத்தி உள்ள நிலையில், குன்னுாரில் உள்ள ஏல மையத்தில் தேயிலை துாள் ஏலம் விடப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. நாட்டிலேயே, 2வது பெரிய ஏல மையமான, குன்னுார் தேயிலை ஏல மையத்தில் தென் மாநிலங்களில் அதிகபட்ச தேயிலை துாள் ஏலம் விடப்படுகிறது. வாரத்திற்கு சராசரியாக, 15 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை ஏலம் நடக்கிறது.சமீபத்தில், குன்னுார் தேயிலை வர்த்தக சங்கத்தில் (சி.டி.டி.ஏ.,) தலைவர் தேர்வில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், தேயிலை ஏல மையம் மூடப்பட்டு ஊழியர்கள் வாழ்வாதாரம் பாதித்தது.ஜன., 3வது வாரத்தில் நடக்கும் ஏலம், கோவை ஏல மையத்திற்கு மாற்றம் செய்யும் நிலை உருவானது. இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் கடந்த, 5ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.தொடர்ந்து, நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா, தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துகுமார் உட்பட அதிகாரிகள் தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டனர்.இதன் அடிப்படையில், குன்னுார் தேயிலை வாரியத்தில், அதிகாரிகள் முன்னிலையில் விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் பாதிப்புகளின்றி தொடர்ந்து ஏலம் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால், கோவைக்கு மாற இருந்த தேயிலை ஏலம் மைய திட்டம் கைவிடப்பட்டது.விவசாயிகள் கூறுகையில், 'இந்த முயற்சி வரவேற்கதக்கது. எனினும், தலைவர் பதவி தேர்வு நடத்தி, குன்னுார் ஏல மைய பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என்றனர்.