குன்னுார் : 'குன்னுாரில் வனவளம் நிறைந்த பந்துமி பகுதியில், தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் திட்டத்தை மாற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மலை பகுதியில் அரிய வகை தாவரங்கள் வளர ஏற்ற மண் வளமும், காலநிலையும் நிலவுவதுடன், ஆசியாவின் சிறந்த பல்லுயிர் சூழல் மண்டலமாக உள்ளது. சமவெளி பகுதியின் குடிநீர்; விவசாயத்தின் நீர் தொட்டியாகவும் இம்மாவட்டம் விளங்குகிறது. நீல மலைக்கு உரித்தான குறிஞ்சி மலர்களும், பசுமை புல்வெளிகளும் சிறப்பு பெற்றதாக இருந்த நிலையில், சமீப காலமாக வனங்களும்; வன வளமும் அழிக்கப்பட்டு வருவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த காலங்களில், புல்வெளிகள்; விவசாய தோட்டங்கள் தேயிலை தோட்டங்களாக மாறியதுடன், தற்போது அவை கட்டட காடுகளாக மாறி வருகிறது. கட்டடங்களை கட்டுப்படுத்தவும், நீராதாரங்கள் காக்கவும் ஐகோர்ட் அதிரடி உத்தரவுகள் பிறப்பித்த போதிலும், மலையை குடைந்து மண் அகற்றி, இயற்கை வளங்கள் சிறிது, சிறிதாக அழிக்கப்பட்டு வருகிறது. நீராதார பகுதியில் புதிய திட்டம்
இந்நிலையில், குன்னுார் எடப்பள்ளி அருகே பந்துமி பகுதியில், நீராதாரகள் உள்ள, நகராட்சியின், 30 ஏக்கரில், பி.எட்., கல்லுாரி அமைக்கும் நோக்கில், கடந்த, 2021ம் ஆண்டு அப்போது வனத்துறையின் அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது சுற்றுலா துறைக்கு மாறிய அமைச்சர் ராமச்சந்திரன், அதே இடத்தை ஆய்வு செய்து, 'இப்பகுதியில், தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்,' என, அறிவித்துள்ளார். இதனால், விவசாயத்துக்கான நீர்; குன்னுார் குடிநீர் கிடைப்பத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். குன்னுார் நகருக்கு பாதிப்பு
லஞ்சம் இல்லா நீலகிரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,''இப்பகுதிகளில், அழிவின் பிடியில் உள்ள தவிட்டு பழ செடிகள்; சோலை மரங்களை தொடர்ந்து அழித்து, செம்மண் கடத்தப்பட்டு வருவதை அறிந்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இங்கு பந்துமி திட்டம் வந்தால், நகராட்சியின் தடுப்பணை உட்பட, 9 இடங்களில் உள்ள நீராதாரங்கள் வறண்டு விடும். குன்னுார் நகருக்கான குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். வேலை வாய்ப்பு இல்லாத குந்தா போன்ற இடத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைத்தால் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்,'' என்றார். இது தொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலர் சஜீவன் என்பவர், மாநில முதல்வருக்கு புகார் மனுவை அனுப்பி உள்ளார்.
பாதிக்காது
சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில்,'' ஊட்டியில் தேர்வு செய்யப்பட்ட இடம் தொடர்பாக, வனத்துறை; எச்.பி.எப்., இடையே கோர்ட்டில் வழக்கு உள்ளது.அதனால், அந்த இடம் கைவிடப்பட்டு, பந்துமி பகுதியில் தொழிற் நுட்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள சோலை தாவரங்களும்; தண்ணீர் ஆதாரமும் பாதிக்கப்படாது. அந்த வகையில் தான் திட்டம் நிறைவேற்றப்படும். பலருக்கு வேலை கிடைக்கும்,'' என்றார்.