உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலை ஓரங்களில் செயற்கை தீ மூட்டும் பணி: வனத்தீ பரவுவதை தடுக்க நடவடிக்கை

சாலை ஓரங்களில் செயற்கை தீ மூட்டும் பணி: வனத்தீ பரவுவதை தடுக்க நடவடிக்கை

கூடலுார்:முதுமலையில் வறட்சியால், வனத் தீ ஏற்படுவதை தடுக்க, சாலை ஓரங்களில் செயற்கை தீ மூட்டி, தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக பகுதியில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த பருவ மழை பெய்யாததால், கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் துவங்கியுள்ளது. இதனால், வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.வறட்சியான பகுதியில் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் வாகனங்களின் மூலம் தண்ணீர் எடுத்து சென்று சிமென்ட் தொட்டிகளில் ஊற்றி வருகின்றனர்.இந்நிலையில், நீலகிரியில் பிரசித்தி பெற்ற மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, 16ல் துவங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.இவ்விழாவில் உள்ளூர் மட்டும்மின்றி, கோவை, ஈரோடு மற்றும் கர்நாடகா பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் முதுமலை புலிகள் காப்பகம் வழியாக வந்து செல்ல உள்ளனர்.இவ்வாறு வரும் பக்தர்களால் வனத் தீ ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மைசூரு தேசிய நெடுஞ்சாலை, தெப்பக்காடு - மசினகுடி சாலை, மசினகுடி - பொக்காப்புளை சாலை ஓரங்களில், வனத்துறை சார்பில், செயற்கை தீ மூட்டி, தீ தடுப்பு கோடும் அமைக்கும் பணி நடந்து வருகிறது.முதல் கட்டமாக தெப்பக்காடு - மசினகுடி இடையே தீ தடுப்பு கோடும் அமைக்கும் பணிகள் நேற்று துவங்கப்பட்டது. வனச்சரகர் பாலாஜி தலைமையில் சாலையோரம் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியை வன ஊழியர்கள் துவங்கினர்.வனத்துறையினர் கூறுகையில், 'சாலையோரங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொக்காபுரம் கோவிலுக்கு சென்று வரும் பக்தர்களால் வனத் தீ ஏற்படுவதை தடுக்க சாலை ஓரங்களில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகிறது. எனவே, இவ்வழியாக பயணிப்பவர்கள் தீ ஏற்பட கூடிய பொருட்களை சாலையோரங்களில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை