உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளிக்குள் புகுந்த யானைகளால்... பொருட்கள் சூறை! மாணவர்களை அனுப்ப பெற்றோர் அச்சம்

பள்ளிக்குள் புகுந்த யானைகளால்... பொருட்கள் சூறை! மாணவர்களை அனுப்ப பெற்றோர் அச்சம்

குன்னுார்;குன்னுார் நான்சச் அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் பொருட்களை சேதம் செய்தன; மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சப்படும் சூழல் உருவாகி உள்ளது.குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த மாதம் முகாமிட்டிருந்த, 10 காட்டு யானைகளில், 8 யானைகள் பிரிந்து தற்போது நான்சச் பகுதியில் முகாமிட்டுள்ளன. காலை நேரங்களில் வனப்பகுதியில் இருக்கும் யானைகள் மாலை, 6:00 மணிக்கு மேல் தேயிலை தோட்டம் மற்றும் கிராம பகுதிகளில் உணவுக்காக உலா வந்த வண்ணம் உள்ளன.

பள்ளி பொருட்கள் சூறை

இந்நிலையில், நேற்று அதிகாலை நான்சச், சி.எஸ்.ஐ., அரசு உதவிபெறும் உயர்நிலை பள்ளி வளாகத்தில் புகுந்த யானைகள், சத்துணவு கூட கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை உட்கொண்டன. பள்ளி வளாகத்தில் வைத்திருந்த பூச்செடிகள் மற்றும் மரம், செடிகளை சேதப்படுத்தின. அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர் குடியிருப்பு கேட்டை உடைத்தன. தொடர்ந்து நேற்று காலை, 6:00 மணி அளவில் காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. தகவல் அறிந்த அங்கு வந்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.பள்ளி ஆசிரியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட பிறகு மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன. கடும் பனிமூட்டம் நிலவுவதால் யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிக்கு அனுப்ப அச்சம்

அப்பகுதி மக்கள் கூறுகையில்,'கடந்த ஆண்டு துவக்கத்தில் இதே போல காட்டு யானைகள் வந்து இங்குள்ள வாழை மரம் உள்ளிட்ட பொருட்களை சேதம் செய்தது. தற்போது, மீண்டும் குடியிருப்பு வளாகத்திற்குள் வராமல் இருக்க இங்குள்ள வாழை மரங்களை வெட்ட வனத்துறை அறிவுறுத்தியது. 'அதன் பேரில், உடனடியாக அனைத்து வீடுகளிலும் வாழை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. எனினும் உணவு கிடைக்காத இந்த யானைகள் தற்போது பள்ளி வளாகத்தை சூறையாடியுள்ளன. இங்கு பகல் நேரத்திலும் சில நேரங்களில் யானைகள் உலா வருவதால், பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படும் சூழல் உள்ளது,' என்றனர்.குன்னுார் ரேஞ்சர் ரவீந்தர் கூறுகையில், ''ஏற்னகவே யானை பள்ளம் சென்ற காட்டு யானைகள் மீண்டும் நான்சச் பகுதியில் வந்து முகாமிட்டுள்ளன. கடும் பனிமூட்டம் மழை காரணமாக, யானைகளை விரட்ட முடியாத சூழ்நிலை உள்ளது. எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க, 20 பேர் கொண்ட குழு இரு குழுக்களாக பிரிந்து இரவு பகலாக கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை