ரயில் பயணியிடம் கைவரிசை; திருச்சி வாலிபர் கைது
பாலக்காடு,; பாலக்காடு ரயிலில் திருடிய திருச்சி வாலிபரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையிடம், பயணியர் இருவர், தங்களின் தங்க நகைகள், மின்னணு பொருட்கள் மற்றும் பணம் அடங்கும் பையை மர்ம நபர் திருடிச் சென்றதாக புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த ரயில்வே பாதுகாப்பு படை, பாலக்காடு ரயில்வே கோட்டம் பாதுகாப்பு கமிஷனர் நவீன் பிரசாந்த் அறிவுரையின்படி, தனிப்படை அமைத்து சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது திருச்சி ராம்ஜி நகர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன், 28, என்பது தெரிந்தது. இதையடுத்து திருச்சி சென்று அவரை கைது செய்தனர். பாதுகாப்பு கமிஷனர் நவீன் பிரசாந்த் கூறியதாவது: இச்சம்பவம் ஜூலை 14ம் தேதி கன்னியாகுமாரி - -பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்துள்ளது. புகார்தாரரின் 18 பவுன் தங்க நகைகள், மின்னணு பொருட்கள் மற்றும் பணத்துடன், அவரது பை திருட்டு போனது. அறிவியல் ரீதியான விசாரணையில், ரயிலில் கைவரிசை காட்டிய நபரை கைது செய்தோம். அவருக்கு வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, கூறினர்.