உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நீலகிரியில் பின் தங்கி வரும் பொதுதேர்வு தேர்ச்சி விகிதம்... அதிகரிக்குமா? கல்வி துறை சிறப்பு கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்

 நீலகிரியில் பின் தங்கி வரும் பொதுதேர்வு தேர்ச்சி விகிதம்... அதிகரிக்குமா? கல்வி துறை சிறப்பு கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்

ஊட்டி: 'அரசு பொது தேர்வில் மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில், கடந்த சில ஆண்டுகளாக, நீலகிரி கல்வி மாவட்டம் பின் தங்கி வரும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்ட மாவட்ட மாணவர்கள் பெரும்பாலானோர் அரசு பள்ளியை நம்பியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக, 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொது தேர்வுகளில் நீலகிரி கல்வி மாவட்டம் மாநில அளவில், 32 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த தேர்ச்சி விகிதம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியை நம்பியுள்ள மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மாவட்ட கல்வி அதிகாரிகள், சிறப்பு கவனம் செலுத்தி, அரசு மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதல் ஆறு மாதம் நிறைவு நடப்பு, 2025 -- 2026ம் கல்வியாண்டு துவங்கி, ஆறு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வு செய்முறை தேர்வுக்கு இரண்டு மாதமும், பொது தேர்வுக்கு மூன்று மாதம் மட்டுமே கால அவகாசம் உள்ளது. பண்டிகை, விடுமுறை தினங்கள் போக, பள்ளி, 57 நாட்கள் மட்டுமே முழுமையாக செயல்படும் நிலை உள்ளது. இத்தகைய நாட்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே, 2026 பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்த முடியும். அதற்கான முன்னேற்பாடுகள் அவசியமாக உள்ளது. சிறப்பு வகுப்புகள் அவசியம் பெற்றோர் கூறுகையில், 'ஒவ்வொரு பள்ளியிலும், 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு, சனி கிழமைகளில் சிறப்பு வகுப்பு, வார நாட்களில் காலை, மாலை ஒரு மணி நேரம் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட வேண்டும். இதற்காக, ஒவ்வொரு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் அடங்கிய சிறப்பு குழு தலைமை ஆசிரியர் தலைமையில் உருவாக்கப்பட்டு உரிய நடவடிக்கை வேண்டும்,' என்றனர். மாணவர் ஒத்துழைப்பு வேண்டும் கல்வி அதிகாரிகள் கூறுகையில்,' 10 மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க, அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது ஒவ்வொரு ஆண்டும் உள்ள நடைமுறை தான். மாணவ, மாணவியர் சிறப்பு வகுப்புகளில் தவறாமல் பங்கேற்பதன் வாயிலாக கூடுதல் மதிப்பெண்களை எளிதில் பெற முடியும். நீலகிரியில் நிலவும் காலநிலையை கருத்தில் கொள்ளாமல், பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புக்கு தங்கள் பிள்ளைகளை பெற்றோர் கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். மாணவ, மாணவியர் இந்த வகுப்புகளில் தவறாமல் பங்கேற்பதன் வாயிலாக கூடுதல் மதிப்பெண்களை எளிதில் பெற முடியும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை