பெண்ணிடம் ரூ. 6 லட்சம் மோசடி: நிதி நிறுவன அதிபர் கைது
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுசி, என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தை களுடன் கோவை வடமதுரை பகுதியில் வசித்து வரு கிறார். ஊட்டி அருகே, தும்மனட்டி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார், 46, என்பவர் சுசியிடம் அறிமுகமாகி, நான் நடத்தும் நிதி நிறுவனத்தில் நீங்கள் பணம் கட்டி பங்குதாரராக சேர்ந்தால், மாதம் பல லட்சம் பணம் வரும் வகையில் ஏற்பாடு செய்து தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய சுசி கடந்த ஜன., மாதம், முதல் கட்டமாக, 29,680 ரூபாய் கொடுத்த நிலையில், மொத்தமாக, 6.24 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இது வரை சுசிக்கு பணம் எதையும் திருப்பி தரவில்லை. சுசி பணம் கேட்டு தொடர்பு கொண்ட போது காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுசி இதுகுறித்து ஊட்டி ஊரக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விஜய சண்முகநாதன், எஸ்.ஐ., ரூபன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜ்குமாரை கைது செய்தனர்.