| ADDED : மார் 28, 2024 11:27 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மறவனுாரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 50, விவசாயி. இவர், தன் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்த நிலையில், விராலிமலையில் உள்ள ஒரு தனியார் கடையில், பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி நெற்பயிர்களுக்கு தெளித்தார். ஓரிரு நாட்களில், அவரது 9 ஏக்கர் நெற்பயிர்களும் கருகின. பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலை ஆய்வு செய்த போது, காலாவதியான மருந்து என்பது தெரிந்தது. இது தொடர்பாக, செந்தில்குமார் திருச்சி மற்றும் புதுக்கோட்டை கலெக்டர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால், நேற்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கூடினர். கருகிய நெற்பயிர்களை சாலையில் கொட்டி, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதால், போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்தனர்.