குழந்தைக்கு மரபணு நோய் பாதிப்பு மருத்துவமனைக்கு ரூ.75 லட்சம் பைன்
புதுக்கோட்டை: மரபணு நோய் பாதித்த குழந்தைக்கு, பிரசவம் பார்த்த மருத்துவமனை தரப்பில் 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. தனியார் மருத்துவமனைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், நுகர்வோர் குறைதீர் ஆணையம், மனுதாரருக்கு தனியார் மருத்துவமனை 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையை சேர்ந்த பெண்மணி ஒருவர், அவர் கருவுற்ற, செப்., 2021 முதல் பிரசவம் வரையிலும், 'தஞ்சாவூர் அவர் லேடி' என்ற தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்தார். கருவில் இருந்த குழந்தை ஆரோக்கியமாக இருந்ததாக, மருத்துவமனை தரப்பில் சான்று அளிக்கப்பட்டு, பிரசவம் மேற்கொள்ளப்பட்டது. அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்த பின், போதிய வளர்ச்சி இல்லாத காரணத்தால், பரிசோதித்த போது, மரபணு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், மருத்துவமனையை அணுகி விளக்கம் கேட்டபோது, உரிய பதில் இல்லை. இதனால், 2024 ஜனவரியில் புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நுகர்வோர் ஆணைய தலைவர் சேகர், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நஷ்ட ஈடாக, 75 லட்சம் ரூபாயை, அவர் லேடி மருத்துவமனை நிர்வாகம் வழங்க உத்தரவிட்டார்.