| ADDED : ஜூன் 27, 2024 11:46 PM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மீன்களை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்ட குழந்தை தொழிலாளர்கள் 5 பேரை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மீட்டனர். இந்த ஆய்வு பெயரளவுக்கு நடந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க செல்லும் படகு மற்றும் மீன்களை பதப்படுத்தும் கம்பெனியில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவல்படி ராமநாதபுரம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் நேற்று ராமேஸ்வரம் மீன் இறக்கும் பாலத்தில் ஆய்வு செய்தனர்.அப்போது மீன்களை பதப்படுத்த ஐஸ் பார்களை உடைத்தும், மீன்களை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்ட 18 வயதுக்கும் குறைவான 5 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர். இவர்களுக்கு அறிவுரை வழங்கியும், பணியில் ஈடுபடுத்திய வியாபாரிகளுக்கு எச்சரிக்கை செய்தனர். பெயரளவில் ஆய்வு
ராமேஸ்வரத்தில் 600 விசைப்படகுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மீன் கம்பெனிகள், ஓட்டல்கள் உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள், அதுவும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் கூலி வேலை செய்கின்றனர். இதனை அதிகாரிகள் தடுக்காமல் நேற்று பெயரளவில் மீன் இறக்கும் பாலத்தில் மட்டும் கண்டுதுடைப்புக்காக ஆய்வு செய்தனர்.