| ADDED : ஜூன் 30, 2024 02:24 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் -கோவை சென்ற அரசு பஸ்சின் முன்புற பம்பர் பிளேட் உடைந்து தொங்கியதால் அதனை டிரைவர், கண்டக்டர் கயிறு கட்டி முட்டுக்கொடுத்த அவலம் அரங்கேறியுள்ளது.அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் பல படுமோசமாக உள்ளன. மதுரை டிப்போவைச் சேர்ந்த டி.என்.,58 என் 2426 ஏசி பஸ் நேற்று காலை 7:10 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சும், கார் ஒன்றும் மதுரை அருகே மோதியதில் பஸ் முன்புற பம்பர் பிளேட் உடைந்து தொங்கியது. இதனை டிரைவரும், கண்டக்டரும் சிறிய கயிற்றில் கட்டி முட்டு கொடுத்தனர். பின் அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த பஸ்சை சரி செய்யாமல், நேற்று மீண்டும் ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு இயக்கினர். பஸ் முன் பக்கம் உடைந்திருப்பதை கண்ட பயணிகள் கோவை வரை பஸ் செல்லுமா அல்லது இடையிலேயே நிறுத்தி விடுவீர்களா என கேள்வியும் எழுப்பினர். அதற்கு டிரைவரும், கண்டக்டரும், 'மதுரையில் தனியார் ஒர்க் ஷாப்பில் சிறிது நேரத்தில் சரி செய்து விடுவோம். அச்சப்படாமல் ஏறுங்கள்,' என்றனர். 'என்றுதான் அரசு பஸ்களுக்கு விடியல் ஏற்படுமோ,' என நொந்தபடி பயணிகள் வேறுவழியின்றி பயணித்தனர்.