| ADDED : ஜூன் 30, 2024 02:21 AM
ராமேஸ்வரம்:புனித மற்றும் வணிக நகரமாக விளங்கிய தனுஷ்கோடி, 1964ல் ஏற்பட்ட புயலில் உருக்குலைந்தது. இங்குள்ள தபால் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதிகள் இடிந்து தரைமட்டமாகின. இதையடுத்து, 53 ஆண்டுகளுக்கு பின் 2017 பிப்ரவரி, 22ல் தனுஷ்கோடியில் கிளை தபால் நிலையம் திறக்கப்பட்டு, குடிசையில் இயங்கியது. இதன் வாயிலாக இங்குள்ள, 200க்கும் மேற்பட்ட மீனவர்கள், ஹோட்டல் நடத்தும் வியாபாரிகள் பலரும் சேமிப்பு கணக்கு துவக்கி, பணம் சேமிக்கும் பழக்கமும் உருவானது. இது, மீனவர்களிடம் வரவேற்பை பெற்றது.இந்நிலையில், இங்கு வீசிய சூறைக்காற்றில் ஓராண்டாக தபால் நிலைய குடிசை முற்றிலும் பெயர்ந்து, மழைநீர் புகும் அவல நிலை உள்ளது. இதனால், சேமிப்பு கணக்கு புத்தகம், பதிவேடுகளை, ராமேஸ்வரம் தலைமை தபால் நிலையத்திற்கு ஊழியர் எடுத்துச் செல்வதும், காலையில் பணிக்கு வரும் போது மீண்டும் சுமந்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, இங்கு நிரந்தர கட்டடத்தில் தபால் நிலையம் அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.