உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி பஜார் ரோடுகளில் பல மணி நேரம் நிறுத்தப்படும் சரக்கு லாரிகள் போக்குவரத்திற்கு இடையூறு

சாயல்குடி பஜார் ரோடுகளில் பல மணி நேரம் நிறுத்தப்படும் சரக்கு லாரிகள் போக்குவரத்திற்கு இடையூறு

சாயல்குடி : சாயல்குடியில் போக்குவரத்து நெரிசல் அன்றாடம் நடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சரக்கு வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு முன் நிறுத்தப்படும் லோடு லாரிகள் தான் என மக்கள் தொடர் குற்றம் சாட்டுகின்றனர்.வளர்ந்து வரும் நகராக உள்ள சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான வணிக நிறுவனங்களின் கடைகள் உள்ளன. வணிக நிறுவனங்களுக்கு தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சரக்கு லாரிகளில் கடைகளில் இறக்குகின்றனர்.காலை 8:00 முதல் 11:00 மணி வரை தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் கடைகளுக்கு முன் நிறுத்தப்படும் சரக்கு லாரிகளால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதமும், வீண் பிரச்னையும் ஏற்படுகிறது. சாயல்குடி வணிகர் சங்க தலைவர் விஷ்ணுகாந்த் கூறியதாவது:சாயல்குடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சாயல்குடி நகரின் பிரதான சாலையில் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து பொருட்களை இறக்கி வருகின்றனர்.இதனால் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லக்கூடிய வேன்கள் மற்றும் அரசு பஸ்கள் சாலையை கடக்க முடியாமல் வரிசை கட்டி நிற்கின்றன. போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் சரக்கு லாரிகள் குறித்து கடைக்காரர்கள் வணிகர் சங்கத்தில் புகார் அளிக்கின்றனர்.எனவே நீண்ட நாட்களாக நிலவும் இப்பிரச்னைக்கு தீர்வு காண தனியார் லாரி நிறுவனங்கள் சாயல்குடி நகருக்கு வெளியே தேவையான இடங்களில் கோடவுன் வசதி அமைத்துக் கொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.ஒவ்வொரு கடைக்காரர்களிடமும் தேவையான அளவு வாகனங்கள் உள்ளன. அவற்றின் மூலமாக தங்களுக்கு வேண்டிய பொருள்களை எடுத்துக் கொள்வார்கள். எனவே தொடர் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகும் பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ