ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கோடை காலத்தின் இறுதியில் சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, சாமை என பல தானியப் பயிர் சாகுபடி செய்து மண்வளத்தை பெருக்கி பலன் பெறலாம் என வசாயிகளுக்கு வேளாண்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். கோடை காலம் முடியும் தருவாயில் மாவட்டத்தில் வெப்பம் குறைந்து மழை பெய்கிறது. இந்த காலக்கட்டத்தில் விவசாயிகள் தங்களது நிலத்தில் பல தானியப் பயிர் சாகுபடி முறையை கையாள வேண்டும். ஒரே வயலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல விதமான பயிர்களின் விதைகளை விதைத்து அவை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் வழியாக மண்ணின் வளத்தை பெருக்கலாம். அதாவது சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, சாமை இவற்றில் ஏதாவது நான்கு தானியங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது பாசிப்பயறு, உளுந்து, தட்டைப்பயறு, கொள்ளு அல்லது நிலக்கடலை, ஆமணக்கு, எள்ளு, சூரியகாந்தி, சோயா, மொச்சை என எண்ணெய்வித்துப் பயிர்கள் அல்லது கடுகு, சோம்பு, வெந்தயம், மல்லி ஆகியவற்றை முளைக்கச் செய்யலாம். இதுபோக கொளுஞ்சி. அவுரி, சணப்பு, தக்கைப்பூண்டு, நரிப்பயறு, அகத்தி, செம்பைசித்தகத்தி இதில் எதாவது நான்கு பயிர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஏக்கருக்கு 25 கிலோ அளவில் பயன்படுத்த வேண்டும். வெந்தயம், கடுகு போன்றவற்றை 200 கிராம் எடுத்துக்கொண்டால் போதும். ஆமணக்கு நிலக்கடலை போன்றவற்றை 4 கிலோ அளவிற்கு எடுத்துக்கொள்ளலாம்.பெரிய விதைகளை தனியாகவும், சிறிய விதைகளை தனியாகவும், நடுத்தரமான விதைகளை தனியாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை மணல் அல்லது தொழு எருவுடன் கலந்து பரவலாகத் தெளிக்க வேண்டும். 50 அல்லது 60 நாள் கழித்து புழுதி உழவாகவோ அல்லது சேற்று உழவாகவோ உழுது நிலத்தில் மடக்க வேண்டும். இதனால் மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும் விபரம் அறிய அருகேயுள்ள வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சி.சிவகாமி கூறுகையில், கோடை உழவு முறையால் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறைந்து மண்ணின் கரிமச்சத்து அளவு அதிகரிக்கிறது.தானிய பயிர்களை மடக்கி உழுத பிறகு இயற்கை உரங்களான சாணம், கோமியம், பஞ்சகாவ்யம், ஜீவாமிர்தம் ஆகியவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தைத் துவங்கலாம் என்றார். ---