| ADDED : ஏப் 11, 2024 06:20 AM
பரமக்குடி : மூன்றாவது முறையாக மோடி பிரதமராக ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என்று ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசினார்.ராமநாதபுரம் லோக்சபா தொகுதி பா.ஜ., கூட்டணி சுயேச்சை வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து பரமக்குடி அருகே பிடாரிசேரி, பார்த்திபனுாரில் பலாப்பழம் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது நந்தி உருவம் பொறித்த செங்கோலை பன்னீர்செல்வத்திற்கு அர்ஜுன்சம்பத் வழங்கி உயர்த்திப் பிடித்தனர்.அர்ஜுன் சம்பத் பேசியதாவது: ஜெ., வின் விசுவாசியாக இருந்து மூன்று முறை முதல்வராக பதவி வகித்த இரட்டை இலை நாயகனாக திகழ்ந்த பன்னீர் செல்வம் ஏற்கனவே தர்மயுத்தம் நடத்தி அம்மாவின் ஆட்சியை காப்பாற்றினார். இப்போது மீண்டும் அ.தி.மு.க., தொண்டர்களுக்கான உரிமை மீட்பு தர்ம யுத்தத்தை நடத்துகிறார்.தி.மு.க., காங்., தடை செய்த ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தவர் பன்னீர்செல்வம். அவரை நேருக்கு நேராக எதிர்க்க தைரியம் இல்லாதவர்கள் பல பன்னீர்செல்வங்களை களம் இறக்கி உள்ளனர். மோடி ஊழலற்ற ஆட்சி வழங்குகிறார். கொரோனா தடுப்பூசியை இலவசமாக கொடுத்து நம் உயிர்களை காப்பாற்றினார். மத்திய அரசு மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்னையை தீர்க்க ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திராவிட மாடல் ஸ்டாலின் சாராயம் கொடுக்கிறார். இவர்கள் ஆட்சியில் ரவுடிகள் அட்டகாசம் அதிகம். மோடி, யோகி ஆதித்யநாத் ஆட்சியில் ரவுடிகள் இருக்க முடியுமா. தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் சூரிய மின்சாரம் தயாரிக்க மோடி மானியம் வழங்க உள்ளார். கருணாநிதி ஆட்சியில் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு மோடியால் மீட்டெடுக்கப்படும். தொடர்ந்து மூன்றாவது முறை மோடி பிரதமராவதற்கு பன்னீர் செல்வதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.