| ADDED : மார் 25, 2024 05:35 AM
கீழக்கரை : மன்னார் வளைகுடா கடலில் வசிக்கும் அரிய வகை உயிரினங்கள் கரை ஒதுங்கும் போது அவற்றை மீட்டு காப்பாற்ற புதிய ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளது.பொதுவாக மன்னர் வளைகுடா கடலில் காயமடைந்து ஒதுங்கும் அரிய வகை உயிரினங்களான டால்பின்கள், கடல் பசுக்கள், கடல் ஆமைகள், அரிய வகை சுறா உள்ளிட்டவைகளையும் மற்றும் வனப்பகுதிகளில் இருந்து சாலை மற்றும் கிராமங்களில் காயமடைந்த நிலையில் உள்ள புள்ளி மான்கள், நட்சத்திர ஆமை, நரி உள்ளிட்ட வன விலங்குகளை பாதுகாப்பதற்கும் இவ்வகையான ஆம்புலன்ஸ் உதவியாக உள்ளன.கடலில் காயமடைந்து ஒதுங்கும் அரிய வகை உயிரினங்களான ஆமை உள்ளிட்டவைகளை தனியார் வாகனத்தில் ஏற்றுவதற்கு பெரும்பாலானோர் மறுக்கின்றனர். இதனால் இவற்றை காப்பாற்றுவதற்காக பிரத்தியேகமான வசதி கொண்ட ஆம்புலன்சில் மருத்துவ பெட்டி, ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து மருத்துவ உபகரணங்களும் உள்ளன.முதலுதவி செய்யப்பட்டு பின்னர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரகத்தில் நடமாடும் மருத்துவ சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் திட்டம் அப்பகுதியில் உள்ள இயற்கை ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.