| ADDED : மே 02, 2024 02:42 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே இரு புள்ளி மான்களை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.நேற்று அதிகாலை 4:30 மணிக்கு ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் நித்திய கல்யாணி தலைமையில் வனவர் அமுதரசு மற்றும் தேவகுமார், வனக்காப்பாளர் முருகேசன், திருப்பதி ஆகியோர் கொண்ட குழுவினர் பேராவூர் அருகே ரோந்து சென்றனர்.அப்போது ராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சி எம்.ஜி.ஆர்., நகரில் வசிக்கும் உதயகுமார் 33 சந்தேகத்திற்கிடமாக சென்றார். அவரிடம் விசாரித்ததில் இரண்டு புள்ளி மான்களை புல்லங்குடி கண்மாய் பகுதியில் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டார்.அவரிடம் இருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு மான்களின் தலை மற்றும் கால்கள், தோல் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்காக ராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு கைது செய்யப்பட்டார்.வேட்டையில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த சுகன் 30, வெங்கடேஷ் 35, ஆகிய இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.