உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்  ஊராட்சிகளை பசுமையாக்க முயற்சி

 3 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்  ஊராட்சிகளை பசுமையாக்க முயற்சி

திருவாடானை: ஊராட்சிகள் தோறும் பசுமையும் குளுமையும் அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான பணியை ஊரக வளர்ச்சித் துறையினர் மேற்கொண்டுள்ளனர். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊராட்சிகளில் மழைக் காலத்தை பயன்படுத்தி மரக்கன்றுகளை நட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளிலும் 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொண்டி அருகே கொடிப்பங்கு, திருவாடானை அருகே டி.நாகனியில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு வேம்பு, புளி, நாவல், கொய்யா, நெல்லி, மா உள்ளிட்ட மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடப்பட்டு வருகிறது. இது குறித்து பி.டி.ஓ. (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் கூறியதாவது: கிராமங்கள் தோறும் பசுமையை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குறுங்காடுகள் அமைக்கப்பட்டு மரங்கள் வளர்ந்து பசுமையாக மாறியுள்ளது. ரோட்டோரங்கள், நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் மரகன்றுகள் நடப்பட்டுள்ளது. மரக்கன்று பராமரிப்பில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அந்தந்த ஊராட்சியில் இருந்து சம்பளம் வழங்கப்படும். மரக்கன்றுகளை அந்தந்த பகுதிகளில் நடவு செய்தபின் அதன் வளரும் தன்மையை பொறுத்து, பராமரிப்பு மேற்கொள்ளப்படும். இதன் காரணமாக வருங்காலத்தில் கிராமங்கள் தோறும் பசுமையும் குளுமையும் அதிகரிக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை