| ADDED : டிச 12, 2025 05:28 AM
ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் பார்த்திபனுார் வைகை ஆற்றுப் பகுதியில் 1975ல் மதகு அணை கட்டப்பட்டது. 50 ஆண்டுகளை தொடும் நிலையில் வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் பல நுாறு கண்மாய்கள் பயனடையும் வகையில் உள்ளது. வானம் பார்த்த பூமியாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான விளை நிலங்கள் கண்மாய் பாசனத்தை நம்பியே உள்ளது. குறிப்பாக பரமக்குடி அருகே பொட்டிதட்டி துவங்கி 24 கி.மீ., வரை களரி கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படாமலும், தொடர் பராமரிப்பின்றி சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து ஒவ்வொரு பிரிவு கால்வாய்களிலும் கட்டப்பட்ட தடுப்பு சுவர்கள் உடைந்து தண்ணீரை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. களரி கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து பொதுப்பணித்துறை (நீர்வளம்) சார்பில் ரூ.14 கோடியில் களரி கால்வாயை மறு சீரமைக்கும் பணி டிச.,5ல் பூமி பூஜையுடன் துவங்கியுள்ளது. பொட்டிதட்டி துவங்கி களரி வரை 24 கி.மீ., வரை கால்வாயை துார்வாரி கரைகள் பலப்படுத்தப்பட உள்ளது. இவ்வழியில் உள்ள 20 மதகுகளில் ஷட்டர், சேதமடைந்த தடுப்பு சுவர்கள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் 36 கண்மாய்கள் பயன்பெறும். தற்போது கால்வாயை சர்வே செய்யும் பணி நடக்கிறது. கால்வாய் சீரமைப்பு பணியை 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை(நீர்வளம்) அதிகாரிகள் தெரிவித்தனர்.