| ADDED : செப் 23, 2011 11:28 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், குறைதீர் மனுவுக்குரிய
ஒப்புகை சீட்டுகளை கம்ப்யூட்டர் பிரின்ட் எடுத்தும், கையால் எழுதியும் இரு
வேறு நிலையில் கொடுப்பதால், மனு கொடுக்க வருவோர் குழப்பத்தில் ஆழ்ந்து
வருகின்றனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும்
நடக்கும் குறைதீர் கூட்டத்தில் ஏராளமானோர் மனு கொடுத்து வருகின்றனர். இந்த
மனுக்கள் முதலில் நோட்டில் எழுதப்பட்டு, அதற்குரிய ஒப்புகை சீட்டு
வழங்கப்பட்டு வந்தது. ஒப்புகை சீட்டில் கோரிக்கை, தொடர்புடைய அலுவலர்,
முகவரி போன்ற தகவல்கள் இருக்கும். இவை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு,
இதற்கான தனி இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கலெக்டர்
அலுவலகத்துக்கு வராமலேயே, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி
ஏற்படுத்தப்பட்டது. இருந்தாலும் ஏராளமானோர் நேரடியாக விண்ணப்பித்து
வருகின்றனர். அவர்களுக்கு கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட் எடுத்து ஒப்புகை
சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் முதலில்
கம்ப்யூட்டர் மூலம் ஒப்புகை சீட்டும், நேரம் செல்ல, செல்ல கையால் எழுதி
கொடுத்து விடுகின்றனர். இதனால் ஏற்கனவே வாங்கியவர்களுடன் ஒப்பிட்டு
பார்த்து, அந்த ஒப்புகை சீட்டு தரவில்லையே என்ற குழப்பத்தில் மனு கொடுக்க
வருவோர் தவித்து வருகின்றனர்.