| ADDED : மார் 17, 2024 11:41 PM
முதுகுளத்துார் : -முதுகுளத்துார் அருகே ஆம்பல் கூட்டம் கிராமத்திற்கு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் இதுவரை பஸ்வசதி இல்லாத கிராமமாக உள்ளது. கிராமத்தில் அடிப்படை வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.ஆம்பல்கூட்டம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கால்நடை வளர்ப்பு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கிராமத்திற்கு தற்போது வரை பஸ்வசதி இல்லாததால் 3 கி.மீ., துாரம் நடந்து சென்று பஸ்க்கு காத்திருந்து செல்கின்றனர். காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு நல்லுக்குறிச்சி முக்குரோட்டில் இருந்து ஆம்பல்கூட்டம் வழியாக கண்டாக்குளம் வரை ரூ.1 கோடியே 57 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் 20 நாட்களுக்கு முன்பு முடிவுற்றது. இந்த புதியச் சாலை தரமற்ற முறையில் அமைக்கப் பட்டுள்ளதால் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இதுகுறித்து இளவரசி கூறியதாவது, சாலை அமைக்கும் பணியின்போது காவிரி குடிநீர் குழாய் உடைக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக குடிநீர் வரவில்லை. டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதுவும் வரவில்லை ஏனில் 3 கி.மீ., தூரம் தள்ளு வண்டியில் தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை உள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் மக்கள், பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். குடிநீர் வழங்க வேண்டும். சேதமடைந்த புதிய சாலையை சீரமைக்க வேண்டும் என்றார்.விவசாயி பாலுச்சாமி கூறியதாவது, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்து தற்போது வரை கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. 3 கி.மீ., தூரம் மக்கள் நடந்து சென்று நல்லுக்குறிச்சி முக்குரோட்டில் காத்திருந்து பஸ்ஸில் செல்கின்றனர். இதனால் மக்கள், மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு கேட்க வரும் அரசியல்வாதிகள் அனைத்து அடிப்படை வசதியும் செய்து தருவதாக கூறிவிட்டு வென்ற பிறகு கிராமத்திற்கு வருவது கிடையாது. அடிப்படை வசதி இல்லாமல் ஆம்பல்கூட்டம் மக்கள் தவிக்கின்றனர். எனவே அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்து காவிரி குடிநீர், சாலை, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்செய்துதர வேண்டும்.