| ADDED : பிப் 12, 2024 04:50 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பருத்தி செடியில் நோய் தாக்குதலை வேளாண் அதிகாரிகள் வயலில் ஆய்வு செய்து, கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் புல்லமடை, ராமநாதமடை, சேத்திடல், வரவணி ஆகிய இடங்களில் பருத்திச் செடியில் பச்சை தத்துப்பூச்சி, அசுவினி, இலைப்பேன், மாவு பூச்சி மற்றும் வெள்ளை ஈ தாக்குதலால், செடிகளின் இலைகளின் ஓரத்தில் சிவப்பு நிறமாக மாறி பின் இலைகள் கருகிவருகின்றன. புல்லமடையில் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ராம்குமார், உதவி இயக்குனர் தர கட்டுப்பாடு நாகராஜன் ஆகியோர் பருத்தி வயல்களை ஆய்வு செய்தனர்.வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி தெரிவித்ததாவது, நோய் தாக்குதலால் இலைகள் வளர்ச்சி குன்றியும், பூக்கள் மற்றும் மொட்டுக்கள் உதிர்ந்து காணப்படும். வளர்ந்த பூச்சிகள் பழுப்பு நிறத்திலும் காணப்படும். இவ்வகை அறிகுறிகள் தென்படும் பருத்தி வயல்களில்,தையாமீத்தாக்சிம் 40 கிராம் அல்லது புப்ரோபெசின் 24 கிராம், இவற்றில் ஏதாவது ஒன்றை 200லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பானில் தெளித்து நோயை கட்டுப்படுத்தலாம் என்றார்.