உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பசும்பொன் தேவர் குருபூஜை விழா துளிகள்

பசும்பொன் தேவர் குருபூஜை விழா துளிகள்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118 வது ஜெயந்தி 63வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. அரசு விழாவாக கொண்டாடப்படுவதால் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு முன்பாகவே 15 நிமிடம் பொதுமக்கள் தரிசனம் செய்வதை நிறுத்தினர். இதனால் காத்திருந்த பொதுமக்கள் சிரமப்பட்டனர். *பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் நீதிமன்ற உத்தரவு இருப்பதாக கூறி, நாங்கள் தான் நேரடி வாரிசு என மரியாதை செலுத்த வந்தனர். அப்போது பரபரப்பு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சமாதானம் செய்து அனுப்பினர். இதனால் சிறிது நேரம் தரிசனம் செய்ய வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். *கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பசும்பொன்னில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு நேற்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஹெலிகாப்டரில் வந்து மரியாதை செலுத்தியுள்ளார்.இதை இப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். *பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு துணை ஜனாதிபதி வந்து மரியாதை செலுத்தியது இதுவே முதல் முறையாகும். *வாகனங்கள் செல்லும் வழியில் ஆங்காங்கே வாகனங்கள் நின்றதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் காத்திருந்து சென்றனர். *பெண்கள் பால்குடம் எடுத்தும், இளைஞர்கள் ஜோதி எடுத்து வந்தும் மரியாதை செலுத்தினர். *மரியாதை செலுத்த வந்த ஆண்கள், பெண்கள் தனித்தனி வரிசையில் அனுமதிக்கப்பட்டனர். *பல்வேறு கட்சிகள், சமுதாய தலைவர்கள் சார்பில் அன்னதானக் கூடம் அமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. * இந்த ஆண்டும் மலர் வளையம் வைக்காமல் மாலை அணிவித்து கட்சி தலைவர்கள்,பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். இதனால் மலர் வளையம் இல்லாத குருபூஜையாக இருந்தது. *பார்த்திபனுார் விலக்கு ரோட்டில் இருபுறமும் வழக்கத்தை விட வரவேற்பதற்காக கட்சி கொடிகள் ஏராளமாக கட்டப்பட்டிருந்தது. * முத்துராமலிங்கத்தேவர் வாழ்ந்த வீட்டிற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். *மரியாதை செலுத்த வந்த இடத்தில் அ.ம.மு.க., பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த சிலர் பழனிசாமி ஒழிக என கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை