உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கச்சத்தீவு விழாவுக்கு செல்ல தடை ராமேஸ்வரத்தில் காத்திருந்த போலீசார்

கச்சத்தீவு விழாவுக்கு செல்ல தடை ராமேஸ்வரத்தில் காத்திருந்த போலீசார்

ராமேஸ்வரம்,:-கச்சதீவு திருவிழாவுக்கு அரசு தடை விதித்த நிலையில் அத்துமீறி செல்லும் மீனவர்களை கைது செய்ய ராமேஸ்வரத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.இலங்கையில் 5 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து பிப்.,23, 24ல் நடக்கும் கச்சத்தீவு விழாவை புறக்கணித்தனர். இதையடுத்து பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் கச்சதீவு விழாவுக்கு செல்வோருக்கு தடை விதித்தது.ஆனால் தடையை மீறி கச்சதீவுக்கு செல்வோம் என நாட்டுப்படகு மீனவர்கள் சிலர் தெரிவித்தனர். இதனால் நேற்று காலை முதல் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட போலீசார் மற்றும் துாத்துக்குடி, ராமநாதபுரம், நாகை மாவட்ட கடலோர பாதுகாப்பு படையினர் என 500 போலீசார் ராமேஸ்வரம் துறைமுகம் வீதி, படகுகள் நிறுத்தும் பாலம், ஓலைக்குடா, பாம்பன் கடற்கரையில் குவிக்கப்பட்டனர்.இந்நிலையில் தடையை மீறி கச்சிதீவு திருவிழாவிற்கு ஒருவர் கூட செல்லவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. தடையை மீறி மீனவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து கடற்கரையில் வெகு நேரம் காத்திருந்த போலீசார் நேற்று மதியம் 3:00 மணிக்கு பின் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கச்சத்தீவு திருவிழா கொடியேற்றம்

பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில் நேற்று மதியம் 3:00 மணிக்கு இலங்கை நெடுந்தீவு பாதிரியார் தலைமையில் அந்தோணியார் சர்ச் முன்புள்ள கொடிக் கம்பத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து சிலுவைப் பாதை பூஜையும், திருப்பலி பூஜையும் நடந்தது. இன்று (பிப்.,24) காலை சர்ச் வளாகத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி பூஜை நடக்கிறது.விழாவில் இலங்கையில் இருந்து 2000 பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக பக்தர்கள் பங்கேற்காததால் கச்சத்தீவு திருவிழா வெறிச்சோடி உள்ளது என இலங்கை பக்தர்கள் தெரிவித்தனர்.

40 பெங்களூரு பக்தர்கள் ஏமாற்றம்

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது தெரியாமல் பெங்களூருவில் இருந்து திருவிழாவிற்கு செல்ல பதிவு செய்திருந்த 40 பக்தர்கள் நேற்று காலை ராமேஸ்வரம் வந்தனர்.அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பிறகே தடை குறித்து தெரிந்ததால் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ