| ADDED : ஜன 25, 2024 05:09 AM
கமுதி; -கமுதி பகுதியில் பெய்த மழையால் கரிமூட்டம் தொழில் பாதிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். கமுதி பகுதியில் நெல், பருத்தி, சோளம், கம்பு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வந்தனர். பருவமழை காலத்தில் தண்ணீரை ஊருணி, கண்மாயில் தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்டு போவதால் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வந்தது. இதனால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. சில விவசாயிகள் வேறு வழியின்றி விவசாயத்திற்கு மாற்றுத்தொழிலாக சீமைக்கருவேலம் மரங்களை வெட்டி கரிமூட்டம் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் குறைந்த நாட்களில் அதிக லாபம் பெறுகின்றனர். கமுதி அருகே கோவிலாங்குளம் பட்டி, தொட்டியபட்டி, நெறிஞ்சிப்பட்டி உட்பட பல்வேறு பகுதியில் விவசாயிகள் மாற்றுத்தொழிலாக கரிமூட்டம் தொழிலுக்கு மாறியுள்ளனர். கமுதி வட்டாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்தது. கோவிலாங்குளம் பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கரிமூட்டம் தொழில் செய்து வந்தனர். மழையால் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த கரிமூடைகள் மூழ்கி வீணாகியது. ஏராளமான விறகுகளும் மழையில் நனைந்து வீணாகியது. கோவிலாங்குளம் பட்டி விவசாயிகள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் விவசாயத்தை கைவிட்டு கரிமூட்டம் தொழிலுக்கு மாறினோம். இந்த ஆண்டு மழையால் கரிமூட்டங்கள், விறகுகள் தண்ணீரில் நனைந்து வீணாகியது. பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் விறகுகளை எரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கரிமூட்டம் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.