உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேர்தல் வியாபாரத்தில் கடைவிரிக்கும் சுயேச்சைகள் : போட்டியாளர்களிடம் பேரம் கைகூடினால் வாபஸ்

தேர்தல் வியாபாரத்தில் கடைவிரிக்கும் சுயேச்சைகள் : போட்டியாளர்களிடம் பேரம் கைகூடினால் வாபஸ்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியாளர்களை கதிகலங்க வைக்க சுயேச்சைகளும் களமிறங்கி உள்ளனர். ரகசிய பேரங்களை இப்போதே துவங்கிவிட்டனர். கைகூடினால் வாபஸ் பெறுவதோடு போட்டியாளர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட முடிவு செய்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சைகள் பலர் நேற்று முதல் மனுதாக்கல் செய்து வருகின்றனர். இதில் சிலர் தங்களுக்கு உள்ள செல்வாக்கை(ஓட்டு வங்கி) கூறி கட்சி வேட்பாளர்களிடம் விலை பேசி கணிசமான தொகையுடன் வாபஸ் பெறும் நோக்கத்தில் உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் என்பதால், 'குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துவிடுவோமோ' என்ற அச்சத்தில் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகளை விலைக்கு வாங்கும் படலத்தில் புரோக்கர்கள் மூலம் பேரம் பேசுவது கடைசிகட்டத்தில் உருவாகும். இதை எதிர்பார்த்தே பெரும் தலைகள் போட்டியிடும் இடத்தில், சுயேச்சைகள் அதிகமாக போட்டியிட உள்ளனர். சில இடங்களில் வாபஸ் பெறாமல் தங்களுக்கு உள்ள செல்வாக்கை பிரசாரத்தின் மூலம் காண்பித்து, பின் கடைசி கட்டத்தில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு எனக்கூறி, வாபஸ் பெறவும் முடிவு செய்துள்ளனர். இதுபோன்ற தேர்தல் வியாபாரத்திற்காக களம் இறங்க புதிய சுயேச்சைகள் பலர் நேற்று மனுக்களை வாங்கி சென்றுள்ளனர். மேலும் 'பசை' உள்ள வேட்பாளர்கள் எந்த பகுதியில் போட்டியிடுகின்றனர் என்ற பட்டியலையும் தயாரித்து அவர்களிடம் வியாபாரம் பேச உத்தேசித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி