உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தலைமன்னாரில் தமிழக மீனவர்உடல்: உளவுப்பிரிவு விசாரணை

தலைமன்னாரில் தமிழக மீனவர்உடல்: உளவுப்பிரிவு விசாரணை

ராமேஸ்வரம்:தலைமன்னார் கடற்கரையில் ஒதுங்கிய தமிழக மீனவர்உடல் குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர். ராமேஸ்வரத்திலிருந்து சில நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்று திரும்பிய மீனவர்கள் சிலர் இலங்கை கடல் பகுதியில் மனித உடல்கள் மிதப்பதாக தெரிவித்தனர். இது குறித்து எவ்வித தகவலும் சேகரிக்க முடியாத நிலையில் அதிகாரிகள் மத்தியில், 'மீனவர்கள் கூறியது உண்மையா?' என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் இலங்கை தலைமன்னார் கடற்கரையில் ஒருவரின் சடலம் ஒதுங்கியது. கழுத்தில் சிலுவையுடன் கூடிய மாலையும், ஆரஞ்சு நிறத்தில் சட்டையும் அணிந்திருந்த நபரின் பாக்கெட்டிற்குள் இந்திய 10 ரூபாய் மற்றும் காசுகளும், தமிழகத்தில் உற்பத்தியாகும் புகையிலை, தீப்பெட்டி போன்றவைகளும் இருந்தன.இவரது உடலை அடையாளம் காணும் வகையில் தலைமன்னார் ஆஸ்பத்திரியில் ஆக.16 வரை வைத்திருக்க இலங்கை போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பாத மீனவர்கள் பற்றி தமிழகத்தில் சமீபத்தில் எவ்வித புகாரும் மீன்துறை பதிவில் இல்லை. இதனால் கடத்தலில் ஈடுபட்ட போது படகுடன் கடலில் மூழ்கியோ அல்லது படகில் இருந்து தவறி விழுந்தோ பலியாகி இருக்கலாம் என்றும், பிரச்னை வரலாம் என்பதால் இது குறித்து புகார் செய்யாமல் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மத்திய, மாநில புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி