| ADDED : ஜன 19, 2024 04:43 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் கோடைகால சாகுபடிக்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை அணையில் இருந்து போதுமான தண்ணீர் வந்ததால் தற்போது கண்மாயில் 3.5 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பெரிய கண்மாய் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மகசூழ்நிலையை எட்டியுள்ளன.இதனால் பெரிய கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரை பாசன விவசாயிகள் அதிகளவில் திறப்பதற்கு வாய்ப்பில்லை. இதனால் கண்மாயில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது. பெரிய கண்மாய் பாசனத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அதிபட்சம் இன்னும் 30 நாட்களுக்குள் முழுமையாக அறுவடையாகும் நிலை உள்ளது.இதனால் நெல் அறுவடைக்கு பின் வயல்களை உழவு செய்து பெரிய கண்மாயில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி கோடை கால சாகுபடிகளான பருத்தி, எள், நிலக்கடலை, உளுந்து உள்ளிட்ட பயறு வகை, சிறுதானியங்கள் சாகுபடி செய்வதற்கு பாசன விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.இதனால், கண்மாய் நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி கோடை கால சாகுபடிக்கு தற்போது ஆயத்தமாகி வருகின்றனர்.