| ADDED : டிச 08, 2025 06:38 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் முகப்பில், மக்கள் அதிகம் கூடும் பஸ்ஸ்டாப் பின் பகுதியில் காசநோய் பிரிவுக்கான கட்டடம் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. காற்றில் பரவும் ஒரு பாக்டீரியா தொற்று காரணமாக காசநோய் வருகிறது. நுரையீரல், தொண்டையில் காசநோய் உள்ள ஒருவர் இருமும் போதும், பேசும் போதும் வெளியேறும் காற்றை மற்றவர்கள் சுவாசிக்கும் போது நோய் தொற்றுகிறது. இந்த நோய் பெரும்பாலும் நீண்ட நேரம் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகம். அதனால் மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் எளிதாகப் பரவும். காசநோய் காரணமாக நாடு முழுவதும் ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக கூட்டு மருந்து சிகிச்சை அளிப்பது, சளி மாதிரிகளை வீடுகளுக்கே சென்று எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் சுகாதாரத் துறையினர் சார்பில் செயல்படுத்தப்படுகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினமும் காசநோய் பரிசோதனைக்காக பலர் வந்து செல்கின்றனர். பெரும்பாலும் அனைத்து மருத்துவமனைகளிலும் காசநோய் பிரிவு பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் செயல்படும். ஆனால், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மட்டும் முகப்பில் காசநோய் பிரிவுக்கான கட்டடம் செயல்படுகிறது. கட்டடத்தை ஓட்டி பஸ் ஸ்டாப் இருப்பதால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதனால் மக்களுக்கு எளிதில் காசநோய் பரவும் அபாயம் உள்ளது. காற்று மூலம் பரவும் தொற்று நோய்களுக்கான பிரிவை பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.