உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  உத்தரகோசமங்கையில் நெல் வயலில் ஆண்டுக்கணக்கில் தேங்கியது கழிவு நீர் விவசாயிகள் பாதிப்பு

 உத்தரகோசமங்கையில் நெல் வயலில் ஆண்டுக்கணக்கில் தேங்கியது கழிவு நீர் விவசாயிகள் பாதிப்பு

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை நான்கு ரத வீதிகளை சுற்றிலும் 200 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்ட விவசாய நிலங்களில் அக்., இறுதியில் இருந்து பெய்த கனமழை மற்றும் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் விவசாய நிலங்களில் அதிகளவு தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில் உத்தரகோசமங்கை நான்கு வீதிகளிலும் 2022ல் ரூ.2.25 கோடியில் அமைக்கப்பட்ட மழைநீர் வாறுகாலில் வீடுகளில் இருந்து விடக்கூடிய கழிவு நீரும் சேர்ந்து விவசாய நிலங்களுக்குள் செல்கிறது. விவசாய நிலங்களுக்குள் கழிவுநீரும் கலந்து வருவதால் சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை உள்ளது. உத்தரகோசமங்கை கண்மாய் நீர்ப்பாசன சங்க தலைவர் மாணிக்கவாசகம் கூறியதாவது: ஒவ்வொரு பருவ மழைக் காலங்களிலும் உத்தரகோசமங்கை நகர் பகுதியில் சேகரிக்க கூடிய மழைநீர் மற்றும் கழிவு நீர் முறையாக வழிந்து ஓடுவதற்கு வழி இல்லாத நிலை உள்ளது. கோயிலில் உள்ள அக்னி தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து மித மிஞ்சிய நீர் மழை நீர் வடிகால் மூலமாக விவசாய நிலங்களுக்குள் செல்கிறது. இந்நிலையில் உத்தரகோசமங்கை தெற்கு மற்றும் கிழக்கு ரத வீதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்பை சந்தித்துள்ளது. பல ஆண்டுகளாக சென்று கொண்டிருந்த நீர் வழித்தடத்தில் தண்ணீர் வெளியே செல்வதற்கு வழி இல்லாத வகையில் உத்தரகோசமங்கையின் முகப்பு பகுதியில் ஒரு சிலர் பெரிய அளவில் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். இதனால் மழைநீர் மற்றும் கழிவுநீர் எங்கும் செல்ல வழி இன்றி நிறைந்துள்ளது. இது தொடர்பாக கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சு வார்த்தையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வழி செய்யப்பட்டது. அதனடிப்படையில் உத்தரகோசமங்கையில் இருந்து வரக்கூடிய மழை நீர் மற்றும் கழிவு நீரை, பழைய பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே ஐந்து ஏக்கர் அரசு நிலத்தில் கொண்டு சென்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். இதற்கான திட்ட மதிப்பீடு திருப்புல்லாணி பி.டி.ஓ., மற்றும் கலெக்டருக்கு முன்மொழிவுகள் மூலம் அனுப்பி மழைக் காலம் முடிவுற்றதும் செயல்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் மற்றும் உத்தரகோசமங்கையில் வசிக்கும் மக்களின் நலன் கருதி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை