| ADDED : ஜூலை 02, 2024 05:25 AM
ஏற்காடு : ஏற்காடு வெள்ளக் கடையை சேர்ந்தவர் மூர்த்தி. லாரி ஓட்டுனரான இவர் நேற்று மாலை வெள்ளக்கடை கிராமத்தை அடுத்துள்ள, மேலுார் கிராமத்தில் இருந்து லாரியில் விறகு லோடு ஏற்றிக்கொண்டு சேலம் சென்றுள்ளார்.லாரி, 4:10 மணிக்கு வெள்ளக்கடை கிராம அரசு பள்ளி அருகே வரும்போது, லாரிக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்த மர கட்டைகள் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி, சிறிது துாரம் இழுத்துச் சென்றதில் மின்கம்பம் உடைந்தது. இதில் கம்பத்தில் சென்ற மின் கம்பிகள், லாரியில் இருந்த மரங்களில் சிக்கிக்கொண்டதாலும் மின்கம்பம் உடைந்ததாலும் லாரியை ஓட்டுனர் மூர்த்தி அங்கேயே நிறுத்தியுள்ளார்.இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்வாரிய பணியாளர்கள் லாரியில் சிக்கிய மின்கம்பிகளை அப்புறப்படுத்திய பின், போக்குவரத்து சரி செய்யப்பட்டது.இதனால் அந்த பகுதியில், 4 மணி நேரம் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. பிறகு உடைந்த மின்கம்பத்தை மாற்றிய பின், மின்சார வினியோகம் சீர் செய்யப்பட்டது.