உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பொருட்காட்சியில் மாணவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி கட்டணம்: கலெக்டர்

அரசு பொருட்காட்சியில் மாணவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி கட்டணம்: கலெக்டர்

சேலம்: ''சேலம் அரசு பொருட்காட்சியில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, 50 சதவீத தள்ளுபடியில் நுழைவு கட்டணம் வழங்கப்படும்,'' என, கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்தார். சேலம், கலெக்டர் அலுவலகத்தில், அரசு பொருட்காட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது, பல்வேறு துறை சார்பில் அரங்கு அமைப்பது குறித்து கலெக்டர் மகரபூஷணம் தலைமையில், அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், போலீஸ் துணை கமிஷனர்கள் பாஸ்கரன், ரவீந்திரன் உள்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் மகரபூஷணம் பேசியதாவது: சேலத்தில் ஆண்டு தோறும் ஆடி பண்டிகையை முன்னிட்டு, பழைய பஸ் ஸ்டாண்ட் போஸ் மைதானத்தில், அரசு பொருட்காட்சி அமைப்பது வழக்கம். இந்தாண்டு, அரசு பொருட்காட்சி துவங்குவதற்காக தேவையான ஆயத்தப்பணிகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு துறை சார்பில் அரங்கு அமைப்பது சம்மந்தமாக, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த முதல்கட்ட ஆலோசனையில், பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளில், அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் விதமாக கண்காட்சியில் இடம் பெற வேண்டிய தகவல்கள் மற்றும் திட்ட மாதிரிகள் வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அரசு பொருட்காட்சி இந்த மாதம் இறுதி வாரம் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்குவதற்கான தேவையான நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக, ஆலோசனை செய்யப்பட்டது.

பொருட்காட்சி காண வருபவர்களுக்கு நுழைவு கட்டணமாக சிறுவர்களுக்கு ஐந்து ரூபாயும், பெரியவர்களுக்கு, 10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 50 சதவீத தள்ளுபடி கட்டணத்தில், குழந்தைகள் பொருட்காட்சிக்கு வர வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சி துவங்குவதற்கு முன்னதாக, மக்கள் போக்குவரத்து நெருங்கடியில் சிக்கி தவிப்பதை தடுக்கும் விதமாக, போக்குவரத்து துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து, போக்குவரத்தில் மாற்றம் செய்வது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ