| ADDED : மே 30, 2024 01:31 AM
வீரபாண்டி, பருத்தி செடிகளில், 'வாடல்' நோய் தாக்கம் உள்ளதால், அதை தடுக்கும் வழிமுறை குறித்து வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கிரிஜா அறிக்கை:வீரபாண்டி வட்டாரத்தில் தற்போது பரவலாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த கோடை மழையால் பருத்தி செடிகளில், 'வாடல்' நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. நோய் பாதித்த செடி இலைகளின் நரம்புகள் பச்சையாகவும், மற்ற பாகங்கள் மஞ்சளாகவும் மாறிவிடும்.மஞ்சள் நிற பாகங்கள் வாடி கருகி விடுவதோடு இலையில் புலிவரி கோடுகள் போல் தோன்றி இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும். படிப்படியாக செடி முழுதும் கருகும். 'வாடல்' நோய் அறிகுறி தென்பட்டால், ஒரு லிட்டர் நீரில், இரண்டரை கிராம், 'காப்பர் ஆக்சிகுளோரைடு' 20 கிராம் யுரியா கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம். இல்லை எனில் ஒரு லிட்டர் நீரில், 2 கிராம் 'கார்பன்டசிம்' கரைத்து நோய் பாதித்த செடிகளின் வேர் பகுதியில் ஊற்றினால் கட்டுப்பாட்டுக்கு வரும். இந்த வழிமுறைகளை பின்பற்றி விவசாயிகள் பயன்பெறலாம்.