| ADDED : ஆக 04, 2024 10:26 PM
மேட்டூர்:மேட்டூர் அணை கடந்த, 30ம் தேதி நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டது. உபரிநீர் வெளியேறும், காவிரி நடுவே உள்ள கரட்டில், நான்கு நாய்கள் சிக்கிக்கொண்டன. அவற்றுக்கு கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவுப்படி, தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், 'டிரோன்' மூலம் மூன்று நாட்களாக உணவு வழங்கினர். நாய்களை மீட்க, சென்னை ' ஹெவன் பார் அனிமல்' அறக்கட்டளை சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நாய்களுக்கு உரிய உணவு வழங்குவதாக, வருவாய் துறை சார்பில் வக்கீல் தெரிவிக்கவே, நாளைக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அறக்கட்டளையை சேர்ந்த செந்தமிழ், மேட்டூருக்குவந்தார். 16 கண் மதகு பகுதிக்கு சென்று, நாய்கள் இருந்த இடத்தை பார்வையிட்டார். அவர் கூறுகையில், ''டிரோனில் அனுப்பி வைக்கப்பட்ட உணவை, ஒரு நாய் மட்டும் சாப்பிட்டது. இதர நாய்கள் அங்குள்ளதா அல்லது நீந்தி கரை சேர்ந்தனவா என தெரியவில்லை. நாய்கள் தவிக்கின்றனவா என்பதை உறுதி செய்த பின், எனது அறிக்கையை, அறக்கட்டளை நிறுவனருக்கு வழங்குவேன்,'' என்றார்.அதே நேரம், அங்கு முதல் நாளில் இருந்த கறுப்பு நிற நாய் தற்போது இல்லை. அது வேறிடத்துக்கு சென்று விட்டதா என தீயணைப்பு குழுவினர், பாதுகாப்பு உடை அணிந்து அப்பகுதிக்கு சென்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.