உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கஞ்சா விற்பனைக்கு தடையாக இருந்த அ.தி.மு.க., பிரமுகர் படுகொலை: தி.மு.க., கவுன்சிலரின் கணவர் உள்பட 9 பேர் சிக்கினர்

கஞ்சா விற்பனைக்கு தடையாக இருந்த அ.தி.மு.க., பிரமுகர் படுகொலை: தி.மு.க., கவுன்சிலரின் கணவர் உள்பட 9 பேர் சிக்கினர்

சேலம் : சேலம் தாதகாப்பட்டி, காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம், 62. கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க., செயலராக இருந்தார். இதற்கு முன், மாநகராட்சியில் இருமுறை, கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் பதவி வகித்துள்ளார்.இவர‍து கட்சி அலுவலகம், அம்பாள் ஏரி சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, அலுவலகத்துக்கு சென்று விட்டு, சண்முகம் மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, 3 பைக்குகளில் வந்த கூலிப்படையினர், சண்முகத்தை மறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பினர்.சண்முகத்தின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர், கொலையாளிகள், அதற்கு மூளையாக செயல்பட்டவர்களை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். நேற்று அதிகாலை, 1:37 மணிக்கு சண்முகம் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு வந்தனர்.ஐந்து தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நேற்று காலை, சண்முகத்தின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், 'கொலைக்கு மூளையாக செயல்பட்ட, 55வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தனலட்சுமியின் கணவரான சதீஷ்குமாரை கைது செய்யும்படியும், அவரை கைது செய்தால் தான் சண்முகம் உடலை வாங்குவோம்' என்றும், சண்முகம் குடும்பத்தினர் மற்றும் அ.தி.மு.க.,வினர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.இதற்கிடையே, வாழப்பாடியில் சதீஷ்குமாரை போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும், கொலையில் தொடர்புடைய, கூலிப்படையாக செயல்பட்ட, எட்டு பேரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம், ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாலை, 5:00 மணி வரை, சண்முகம் உடலை அவரது குடும்பத்தினர் வாங்கவில்லை.

பின்னணி என்ன?

போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, 'தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் டிரஸ்டியின் தலைவராக சண்முகம் இருந்தார். அப்பொறுப்பின் பதவி காலம் முடிந்த நிலையில், மீண்டும் பொறுப்பு வகிப்பது தொடர்பாக, மூன்று மாதங்களுக்கு முன், சண்முகம், சதீஷ்குமார் இடையே தகராறு ஏற்பட்டது. சமீபத்தில், சாக்கடை கால்வாய் அமைப்பதிலும் தகராறு ஏற்பட்டது. சதீஷ்குமார், ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். அதற்கு சண்முகம் இடையூறாக இருந்தார். அதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.அதேபோல, மூணாங்கரட்டு பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், ஒரு நம்பர் லாட்டரி விற்ற கும்பலையும் சண்முகம் கண்டித்துள்ளார்; போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இப்பிரச்னைகளில் கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது. திட்டமிட்டு மூன்று நாட்களாக நோட்டமிட்டு சண்முகத்தை, கூலிப்படை கும்பல் கொலை செய்துள்ளது.குறிப்பாக கொலை நடந்த பகுதியில், தெரு மின்விளக்குகள் அணைக்கப்பட்டு, சில சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ளன. 100 மீட்டர் துாரம் சண்முகம் கடந்திருந்தால் வீட்டுக்கு சென்றிருப்பார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை