உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடம்பெயரும் சிறுத்தை: வனத்துறையினர் திணறல்

இடம்பெயரும் சிறுத்தை: வனத்துறையினர் திணறல்

ஓமலுார்:சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட எலத்துார் காப்புக்காட்டில் சிறுத்தை உலா வருகிறது. அடிவார குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. குறிப்பாக குண்டுக்கல், எலத்துார், ராமசாமி மலை ஆகிய காப்புக்காடுகளில் மாறி மாறி வசிக்கிறது. ஒரு பகுதியில் வேட்டையாடிய பின் அப்பகுதியை விட்டு, 10 முதல், 15 கி.மீ.,க்கு இருப்பிடத்தை மாற்றி விடுகிறது. எலத்துார், மூக்கனுார், காருவள்ளி உள்ளிட்ட கிராமங்களில், 20க்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை தாக்கியுள்ளது. வேட்டையாடிய பகுதியை, ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக பதிவு செய்து, அதன்படி சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய, 'டிரோன்' வாயிலாக வனத்துறையினர் தேடி வருகின்றனர். இறுதியாக காருவள்ளி கோம்பைக்காட்டில் சிறுத்தை உள்ளதை உறுதிப்படுத்தினர். அங்கு, 5 கி.மீ., சுற்றளவு கொண்ட கரடு பகுதியில், 2 நாட்களாக கூண்டுகள் வைத்து சிறப்பு தனிப்படையினர், கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் சிறுத்தை அடிக்கடி இடம் பெயர்ந்து செல்வதால் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !