| ADDED : ஜூன் 28, 2024 01:20 AM
ஆத்துார், ஆத்துார் நகராட்சியில் துாய்மை பணிக்கு ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் மூலம், 123 துாய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு, 1 மாத சம்பளம் வழங்காத நிலையில், 7 மாத வருங்கால வைப்பு நிதி செலுத்தாமல் இருந்தது. இதனால் கடந்த, 24ல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதுதொடர்பாக நேற்று, ஆத்துார் நகராட்சி அலுவலகத்தில் பேச்சு நடந்தது. தலைவி நிர்மலாபபிதா தலைமை வகித்தார். இதில் ஒப்பந்த நிறுவனத்தினர், துாய்மை பணியாளர் சங்கத்தினர், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கவுன்சிலர்கள், 'துாய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த கூலித்தொகையை, மாத சம்பளமாக வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.கமிஷனர் சையது முஸ்தபா கமால், 'மாதந்தோறும் சம்பளம், வருங்கால வைப்பு தொகை, துாய்மை பணியாளர்களுக்குரிய பொருட்கள் தாமதமின்றி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதத்தில், அரை நாள் வீதம் இருமுறை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்' என்றார். இதை துாய்மை பணியாளர்கள் ஏற்றதால், கூட்டம் சுமுகமாக முடிந்தது.