மேட்டூர்:மழை தீவிரம் குறைந்ததால் கர்நாடாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டது.கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த, 30ல் மேட்டூர் அணை நிரம்பியது. அணையில் இருந்து ஒரு வாரமாக உபரி நீர், 16 கண் மதகில் வெளியேற்றப்படுகிறது. கர்நாடகா, கேரளாவில் பருவமழை தீவிரம் குறைந்ததால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 19,606 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து நேற்று காலை, 12,225 கனஅடியாக சரிந்தது. அதற்கேற்ப நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 13,167 கனஅடியாக இருந்த கபினி உபரி நீர்திறப்பு நேற்று காலை வினாடிக்கு, 3,542 கனஅடியாக குறைக்கப்பட்டது.நேற்று முன்தினம் கே.ஆர்.எஸ்., நீர்வரத்து வினாடிக்கு, 76,836 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று நீர்வரத்து வினாடிக்கு, 34,039 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 34,773 கனஅடி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் கால்வாய் பாசனம் போக வினாடிக்கு, 37,000 கனஅடி உபரி நீர் மட்டுமே காவிரியில் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரு அணைகளிலும் வினாடிக்கு, 90,000 கனஅடி நீர் திறந்த நிலையில் நேற்று, 50 சதவீதத்துக்கு மேல் நீர்திறப்பு குறைந்தது.நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு வினாடிக்கு, 70,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, இரவு, 8:00 மணிக்கு, 74,662 கனஅடியாக சற்று உயர்ந்தது. நேற்று காலை, 73,330 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மதியம் வினாடிக்கு, 60,273 கனஅடியாக சரிந்தது. அதற்கேற்ப நேற்று முன்தினம் காலை, 16 கண் மதகில் வினாடிக்கு, 48,500 கனஅடியாக இருந்த உபரி நீர் திறப்பு நேற்று மதியம், 28,500 கனஅடியாக குறைக்கப்பட்டது. கர்நாடகா அணைகளின் நீர் திறப்பு குறைந்ததால், மேட்டூர் அணை உபரி நீர் திறப்பு இன்று மேலும் குறைய வாய்ப்புள்ளது.