| ADDED : பிப் 25, 2024 03:58 AM
சேலம்: புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டணத்தை சேர்ந்தவர் முகமது ஹனிபா, 22. துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில், 22. இவர்கள் திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., படித்தனர். இவர்கள், நண்பர்கள் என, 5 பேர் திருப்பத்துார் அருகே ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை, 3 இருசக்கர வாகனங்களில் புறப்பட்டனர்.இதில் யமஹா பைக்கை முகமது ஹனிபா ஓட்ட, அவருடன் முகமது இஸ்மாயில் அமர்ந்திருந்தார்.மதியம், 1:20 மணிக்கு, சேலம், வீராணம், சுக்கம்பட்டி அருகே கோமாளி வட்டத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த காரும் - பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த மரத்தில் மோதியது. இதில் பைக்கில் வந்த முகமது ஹனிபா, முகமது இஸ்மாயில் உயிரிழந்தனர். காரில் இருந்த, 3 பேர் காயம் அடைந்து, மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர்.